பாஜகவில் கேசவ விநாயகத்தின் பதவி பறிக்கப்பட்டிருக்கும் நிலையில், அண்ணாமலைக்கு மீண்டும் முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.


பாஜகவில் கேசவ விநாயகம் பதவி பறிக்கப்பட்டதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி யூடியுப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகத்தின் பதவி பறிக்கப்பட்டு, மற்றொரு நபர் புதிய நபர் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார். எப்ஸ்டின் பைல்ஸ் போன்று, அண்ணாமலை பைல்சில் சிக்கியவர்கள் எல்லாம் அழிந்துவிட்டனர். அதில் தப்பிய ஒரே நபர் கேசவ விநாயகம் மட்டும் தான். அவருடைய ஆர்எஸ்எஸ் பின்னணி காரணமாக அவர் காப்பாற்றப்பட்டார். பாஜக தலைமை மாநில தலைவரை நியமிக்கும். அவர்களை கண்காணிப்பதற்காக ஆர்எஸ்எஸ் தலைமை அமைப்பு செயலாளர் என்று ஆர்எஸ்எஸ் நபர் ஒருவரை நியமிக்கும். பாஜகவை பொறுத்தவரை மிகவும் அதிகாரம் மிக்க பதவி இதுதான். அவரை காலி செய்ய அண்ணாமலை பல்வேறு முயற்சிகளை எடுத்தார். ஆனால் கேசவ விநாயகத்தை அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தற்போது வேறு ஒருவரை வைத்து காலி செய்துவிட்டனர். அவருடைய சகோதரர் முறையிலான நபர்தான் வீடியோ கால் சர்ச்சையில் சிக்கி பதவியை பறிகொடுத்தார். அண்மையில் அவருக்கு மீண்டும் கட்சியில் பொறுப்பு வழஙகப்பட்டது.தற்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் புரோகிராம்களை கவனித்து வருகிறார்.

கேசவ விநாயகம் பதவியை காலி செய்தது பாஜகவினருக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. எனினும் ஆர்எஸ்எஸ் கன்னியாகுமரியை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் பிரமுகரை நியமித்துள்ளனர். அவர் வடதமிழ்நாட்டிற்கான ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளராக இருந்துள்ளார். இது நயினாருக்கு மட்டும் இன்றி கட்சியில் உள்ள அனைவருக்குமே பிரச்சினைதான். தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லி, 6 தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகிய அண்ணாமலைக்கு, தற்போது 234 தொகுதிகளிலும் வாக்குச்சாவடி முகவர்களை கட்டுப்படுத்தும் சக்தி கேந்திரா பொறுப்பாளர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எடப்பாடி பழனிசாமி சொல்லிதான் அண்ணாமலையின் பதவி பறிக்கப்பட்டது. தற்போது மீண்டும் அண்ணாமலைக்கு பதவி கிடைத்துள்ளது எடப்பாடிக்கு பின்னடைவை ஏற்படுத்தும். அதேவேளையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா சேலத்திற்கு வருகை தர உள்ளார். அது எடப்பாடி பழனிசாமிக்கு பலவீனம் தான். அமித்ஷா வந்தால், அவருக்கு விழுகிற வாக்குகளையும் குறையும்.

இந்நிலையில், அமித்ஷா வருகைக்கு முதல் நாளில் சேலத்தில் தவெக தலைவர் விஜய் கூட்டம் நடத்துகிறார். உள்ளரங்க கூட்டமாக நடைபெறும் இந்த நிகழ்வில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது. கட்சி நிர்வாகிகள் மட்டும் 5000 பேர் பங்கேற்க உள்ளனர். விஜய் இப்படி வெளியூர்களில் கூட்டங்கள் நடத்துவதன் மூலம் அவர் அரசியலில் வளர நினைக்கிறார் என்பது தெரிகிறது. சில மாதங்களுக்கு ஒரு முறையாவது கூட்டங்களை நடத்தலாம் என்று நினைக்கிறார். ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விஜய் தரப்பு திரும்பப் பெற்றுள்ளது.
தணிக்கை சான்றிதழ் கோரி ரிவைசிங் கமிட்டியிடம் விண்ணப்பிக்க மனுவை திரும்பப் பெற்றுள்ளனர். இனி எந்த சான்றிதழ் கொடுத்தாலும் தணிக்கை வாரியம் கொடுப்பதுதான். அதை எதிர்த்து மீண்டும் நீதிமன்றத்திற்கு செல்ல முடியாது. அப்படி சென்றால் நீதிமன்றம் கேள்வி எழுப்பும். ஜனநாயகன் முடிந்துவிட்டது. வழக்கு தொடராமல் இருந்திருந்தால் ஒரு வாரத்தில் அவர்களே தணிக்கை சான்றிதழ் வழங்கியிருப்பார்கள். வழக்கு தொடர்ந்ததன் காரணமாக ஒரு மாதம் தள்ளிப் போய்விட்டது. தயாரிப்பாளர் ஒருபுறம் புலம்பி கொண்டிருக்கிறார். விஜய், படத்திற்கு காசு வாங்கிவிட்டோம் இனி உனக்கு ஏன் தர வேண்டும் என்று போய்விட்டார்.

தவெகவின் விசில் யானை பிளிரலைவிட பெரிதாக இருக்கும் என்று கூறியுள்ளார். அவர் யானையை பார்த்துள்ளாரா? என்று தெரியவில்லை. தவெக விருப்பமனுக்கள் விநியோகத்தின்போது கட்சி தொண்டர்கள் பனையூரையே காலி செய்துவிட்டனர். அந்த ஊரையே ஸ்தம்பிக்க செய்துவிட்டனர். போலிசாரை போன்று இவர்களே தடுப்புகளை அமைக்கிறார்கள். அவர்களே சட்டப்பேரவை போன்று செட் போடுகிறார்கள். கடைசியில் தேர்தல் முடிந்ததும் கட்சியை முடித்துவிடுவார்கள்.
சேலத்தில் நடைபெற உள்ள விஜய் கூட்டத்திற்காக அம்மாவட்ட செயலாளர் பவுண்சர்களிடம் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தளபதி வருகிறார் என்றால் 5 முதல் 6 மணி நேரம் சாப்பாடு இல்லாமல் இருக்க வேண்டும். தளபதியை பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் மலை மீது ஏறினாலும் அவர்களை பிடிக்க வேண்டும் என்று சொல்கிறார். நிர்வாகிகள் மட்டுமே கூட்டத்திற்கு வருகிற நிலையில், அவர்களும் கட்டுப்பாடு இன்றி இருப்பார்களா? என்கிற கேள்வி எழுகிறது. விஜயே எந்த கட்டுப்பாடுகளையும் பின்பற்றாதவர் தான். அவர் வழியில்தான் அவருடைய தொண்டர்களும் இருப்பார்கள்.

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, செங்கோட்டையனை கடுமையாக விமர்சித்துள்ளார். விஜயை எந்த நாட்டிற்கு அவர் முதலமைச்சர் ஆக்குவார்? என்றும், வேண்டுமானாலும் எதாவது ஒரு கல்லூரி முதல்வர் ஆக்கலாம் என்று சொல்கிறார். செல்லூர் ராஜு கலாய்க்கும் அளவுக்கு விஜய் மோசமாக போய்விட்டார் என்கிறபோது தவெக தொண்டர்களே வருத்தப்படுவார்கள். விஜய் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை பிடிக்கிறேன் என்று செங்கோட்டையனை பிடித்துவிட்டார் என்பது தான் உண்மை, இவ்வாறு அவர் தெரிவித்தார்.


