spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஅதிமுக - என்.டி.ஏ. அணி ஒட்டவைக்கப்பட்ட கூட்டணி! சசிகலா, ஓபிஎஸ் நிலை என்ன? ஆளுர்...

அதிமுக – என்.டி.ஏ. அணி ஒட்டவைக்கப்பட்ட கூட்டணி! சசிகலா, ஓபிஎஸ் நிலை என்ன? ஆளுர் ஷாநவாஸ் நேர்காணல்!

-

- Advertisement -

அதிமுக – என்டிஏ கூட்டணி என்பது ஒட்டவைக்கப்பட்ட கூட்டணி என்றும், அது எப்போது வேண்டும் என்றாலும் உடைந்து சிதைந்து போகும் என்றும் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

தமிழக அரசியல் நிலவரம் குறித்து விடுதலை சிறுத்தைகள் துணைப் பொதுச் செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் பிரபல தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- 5 ஆண்டுகள் எம்.எல்.ஏ பதவிக் காலத்தில் மிகுந்த மனநிறைவோடு இருக்கிறேன். மக்களுக்கு எதாவது செய்வோம் என்கிற நம்பிக்கையில் தான் இந்த பொறுப்புக்கு வந்தேன். சட்டமன்றத்திற்கு ஒருநாள் கூட விடுப்பு எடுக்காமல் முழுமையாக பங்கேற்றவன் என்கிற நிறைவு எனக்கு இருக்கிறது. தமிழ்நாட்டில் என்.டி.ஏ. கூட்டணி நிறைவு பெற்றுள்ளதாகவும், திமுக கூட்டணி இன்னும் முழுமை பெறவில்லை என்றும் ஒரு கருத்து கூறப்படுகிறது. ஆனால் அதிமுக கூட்டணி இன்னும் முழு வடிவம் பெறவில்லை. டிடிவி தினகரன், அன்புமணி போன்றவர்களை மத்திய பாஜக அரசு தனது அதிகார வலிமையை பயன்படுத்தி பணிய வைத்து கூட்டணியில் இணைத்துள்ளது. அன்புமணி மீது காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்தபோது அவர் மீது தொடரப்பட்ட சிபிஐ வழக்கு உள்ளது.

பிரதமர் மோடி மூன்றாவது முறை பிரதமராகிவிட்டார். இதுவரை அந்த வழக்கை முடிக்கப்படவில்லை. அன்புமணி குற்றவாளியோ அல்லது குற்றமற்றவர் என்றோ சொல்லவில்லை. காரணம் அந்த வழக்கை கையில் வைத்திருந்தால் தான் தாங்கள் நினைப்பதை செய்ய முடியும். கடந்த 10 ஆண்டுகளில் அன்புமணி பாஜக எதிர்ப்பு நிலைப்பாடை எடுத்துள்ளாரா? சாதிவாரி கணக்கெடுப்பு, இடஒதுக்கீடு உள்ளிட்ட பாமக வைக்கும் அனைத்து கோரிக்கைகளிலும் முரண்பட்ட கட்சி பாஜக. அவரை உடன்பட வைப்பது அந்த ஒரு வழக்கு தானே?

டிடிவி தினகரனுக்கும் அதே நிலை தானே? எடப்பாடியுடன் கூட்டணி சேர்வதற்கு தூக்கில் வேண்டுமெனில் போடுங்கள் என்றார். இன்றைக்கு இருவரும் ஒரு தாய் பிள்ளை என்று சொல்கிறார். அப்படி என்றால் இவர்களை வளர்த்து ஆளாக்கிய பொறுப்பு கொடுத்து அழகு பார்த்த சசிகலா அம்மையார் தான், அந்த தாயாக இருக்க முடியும்? சசிகலா வழியாக அடையாளப் படுத்தப்பட்டவர் டிடிவி தினகரன். இன்றைக்கு அந்த தாயை ஏன் நடுத்தெருவில் விட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆக காரணம் சசிகலாதான். ஒரு தாயை மறந்துவிட்டனர். உயிரோடு ஒரு தாய் உள்ளாரே. அவரை எங்கே வைத்திருக்கிறார்கள்?

எல்லோரும் ஒன்றுபடுவது, அதிமுக ஆட்சி மீண்டும் வருவது தான் உங்களுடைய நோக்கம் என்றால்? உங்களை எல்லாம் அரவணைத்த, உங்களுக்கு எல்லாம் பதவி கொடுத்த, அதற்காக 4 வருடம் சிறையில் இருந்த சசிகலா அம்மையாரை தானே நீங்கள் போற்ற வேண்டும். அவர் தலைமையில் தானே மீண்டும் அணி திரள வேண்டும்? மற்றொரு பிள்ளை ஓபிஎஸ் தன்னை சேர்த்துக்கொள்ள  மீண்டும் மீண்டும் கோரிக்கை வைத்தும் சேர்த்துக் கொள்ளாதது ஏன்? இவை எல்லாம் அரசியல் காய் நகர்த்தல்கள். பாஜக நினைப்பது நடக்கிறது அவ்வளவுதான்.

தமிழ்நாட்டில் பாஜக நேரடியாக ஒருவரை முதலமைச்சராக முன்னிறுத்தி தேர்தலை சந்தித்தால், எந்த இடத்தில் வைக்கப்படும் என்று நம்மை விட அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அந்த கட்சிக்கு இங்கே ஏற்பு கிடையாது. அதிமுக வளர வேண்டும் என்று இந்த கூட்டணியை அமைக்கவில்லை. அதிமுகவை, பாமகவை, மற்ற கட்சிகளை பயன்படுத்தி கொள்வதற்காக பாஜக சேர்கிறது. அவர்கள் என்டிஏ அரசு என்று சொல்கிறார்கள். வெற்றி பெற்றால் அதிமுக ஆட்சி. எடப்படி பழனிசாமி முதலமைச்சர் என்று எங்காவது பாஜகவினர் சொல்லியுள்ளனரா? எங்காவது டிடிவி தினகரன் சொல்லியுள்ளாரா?

மகாராஷ்டிராவில் சிவசேனா உடன் சேர்ந்தார்கள். என்டிஏ ஆட்சி என்றுதான் சொன்னார்கள். தற்போது சிவசேனா எங்கே போனாது? 4 சதவீதத்திற்கு கீழே இருந்த கட்சி பாஜக. 40 சதவீதத்திற்கு மேலே இருந்த கட்சி அதிமுக. பாஜக அதிமுக உடன் சேர்ந்தது. இன்றைக்கு பாஜகவின் வாக்கு வங்கி என்ன? அதிமுகவின் வாக்கு வங்கி என்ன? 10 நாடாளுமன்றத் தொகுதிகளில் அதிமுகவை பின்னுக்குத் தள்ளி பாஜக இரண்டாவது இடத்திற்கு வந்ததில்லையா?

அதிமுக தன்னுடைய அடிப்படை கொள்கையில் சமரசம் செய்துகொண்டதால், அதிமுக வாக்காளர்கள் அதிருப்தியாகிவிட்டனர். அதிமுக தன்னுடைய வாக்குகளை இழந்துவிட்டது. எத்தனை தேர்தலாக இந்த நிலைமையை அந்த கட்சி சந்தித்து கொண்டிருக்கிறது. எந்த காலத்திலும் இத்தகைய தொடர் பின்னடைவை அதிமுக சந்தித்தது கிடையாது. எடப்பாடியின் தலைமை, அதிமுகவின் தலைமையாக இல்லாமல் போனதால் தான் இந்த நிலைமை ஏற்பட்டது. இங்கே சமூக நல்லிணக்கம் பின்னி பிணைந்துள்ளது. இந்த மண்ணில் வந்து மதத்தின் அடிப்படையில் ஒரு வெறுப்பு அரசியலை விதைத்தால், மக்கள் ஏற்பார்களா?

அதற்கு அதிமுக துணை போனால், அந்த கட்சியின் வாக்கு வங்கி என்ன ஆகும்? அது எவ்வளவு பெரிய சரிவை சந்திக்கும்? அப்போது நீங்கள் அதை கூட்டணி என்றே ஒப்புக்கொள்ளக் கூடாது. அது கூட்டணியே கிடையாது. அது தங்களுடைய நலனுக்காக பாஜக ஒரு தற்காலிகமாக ஒட்டவைத்திருக்கிறது. எப்போது வேண்டுமானலும் அது உடைந்து சிதைந்து போகும். ஏற்கனவே அது சிதைந்து போனது. இதே மாதிரி ஒட்டவைத்த கூட்டணியாக தானே இருந்தது. ஏன் அது நீடிக்கவில்லை, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ