சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை தீவிரமாக அமல்படுத்துமாறு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம் மற்றும் அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் அட்டவணையை நேற்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. மேலும் நேற்று மாலை முதல் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததாகவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை தீவிரமாக அமல்படுத்துமாறு இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் நடைபெறவுள்ள தேர்தல் ஆணையர்களை கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி,
அரசு மற்றும் தனியார் சொத்துகளில் ஒட்டப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள் மற்றும் பதாகைகளை அகற்ற வேண்டும். அரசு வாகனங்கள் மற்றும் அரசின் தங்குமிடங்களை அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்கள் பயன்படுத்துவதைத் தடை செய்வதை கடுமையாக அமல்படுத்த வேண்டும்.

நிலம், கட்டிடங்கள் அல்லது சுவர்களில் உரிமையாளர்களின் அனுமதி இல்லாமல் கொடிகள் அல்லது பதாகைகள் வைக்கக் அனுமதிக்க கூடாது. சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் சி-விஜில் ஆப் மூலம் புகார் அளிக்க வலியுறுத்தல்
அரசியல் கட்சிகள் கூட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்த முன்கூட்டியே அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகள் உள்ளிட்ட வசதிகளுக்கும் உரிய அனுமதி பெற வேண்டும். அரசு இயந்திரம், வாகனங்கள் அல்லது பணியாளர்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது.
அனைத்து தேர்தல் அதிகாரிகளும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை சார்பற்ற முறையில் அமல்படுத்த வேண்டும் என்றும், அனைத்து கட்சிகளுக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். பொதுமக்கள் பயன்பாட்டிற்கான மைதானங்கள் மற்றும் ஹெலிப்பேட்கள் போன்றவற்றை பயன்படுத்த அரசியல் கட்சிகள் உரிய அனுமதி பெறவேண்டும்.
மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் அதனை கடுமையாக கடைப்பிடிக்குமாறும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடிப்பதில் அனைத்துக் கட்சிகளையும் சமமாக நடத்த வேண்டும் எனவும் தேர்தல் அதிகாரிகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
