திண்டுக்கல்-மதுரை தேசிய நான்கு வழிச்சாலை கொடைரோடு டோல்கேட்டில் மதுரை சென்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாகனத்தை பறக்கும் படையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனா்.
திண்டுக்கல்லில் திண்டுக்கல், தேனி மாவட்ட திமுக இளைஞர் அணி மாவட்ட, ஒன்றிய, நகர,பேரூர் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டாா். பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினாா்.
பின்னா் இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தை முடித்துக்கொண்டு திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் மதுரையில் நடைபெறும் திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மதுரை நோக்கி சென்றுக் கொண்டிருந்தாா்.

கொடைரோடு டோல்கேட் சென்ற போது, அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சகாதேவன், மகேஸ்வரன் கொண்ட குழுவினர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாகனத்தை நிறுத்தி காரின் பின் பகுதியின் இருந்த பைகள், பேக்குகள் உள்ளிட்டவையை சோதனை செய்தனர்.
இந்த சோதனை சுமார் ஐந்து நிமிடம் நடைபெற்றது. காரின் முன்சிட்டில் அமர்ந்து இருந்த உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பறக்கும் படையினருக்கு ஒத்துழைப்பு அளித்து வாகனத்தை சோதனை செய்ய அனுமதித்தார். உதயநிதி ஸ்டாலின் காரில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டப்பேரவை உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் காரில் உடன் இருந்தனர். தேர்தல் பறக்கும் படையினரின் சோதனைக்கு மேற்கொண்ட பின்னா் துணைமுதல்வா் உதயநிதி ஸ்டாலின் மதுரை சென்றாா்.
