அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சோளிங்கர் பார்த்திபன், தண்டபாணி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபால் ஆகியோர் முதலமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அமமுகவிலிருந்து 100-க்கும் மேற்பட்டவர்கள் திமுகவில் இணைந்தனர். சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏவும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக மண்டல பொறுப்பாளரும், ராணிப்பேட்டை மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளருமான என்.ஜி. பார்த்திபன், அதிமுக முன்னாள் எம்.பி.யும், தற்போதைய அம்மா மக்கள் முன்னேற்ற கழக அவை தலைவருமான சி.கோபால், திருப்போரூர் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக செங்கல்பட்டு மாவட்ட செயலாளருமான திருப்போரூர் கோ.தண்டபாணி ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
இவர்களுடன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், நகர செயலாளர்கள் என 100க்கும் மேற்பட்டவர்கள் திமுகவில் இணைந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் சி.கோபால், ”அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் அவைத்தலைவராக இருந்தேன், அம்மா காலத்தில் எம்பியாக இருந்தேன். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் கொள்கைகள் இருப்பதாக தெரியவில்லை. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் தமிழின் வளர்ச்சிக்கும் அக்கறை காட்டி கொண்டிருக்க கூடிய தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையேற்று திமுகவில் இணைந்துள்ளோம். தமிழ்நாட்டின் எதிர்காலம், ஒன்றிய அரசிடம் அடிமைப்பட்டு இல்லாமல் இருக்கும் காரணத்திற்காக நாங்கள் திமுகவிடம் இணைந்துள்ளோம்” என்று கூறினாா்.
பின்னா் பேசிய என்.ஜி.பார்த்திபன் பேசும் போது, நான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகியது மிகத் தாமதமான முடிவு. டி.டி.வி தினகரனை நம்பி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் பயணிப்பவர்களுக்கு எங்களை போன்ற இதுதான் நிலை. மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் எங்களை நாங்கள் இணைத்துக் கொண்டோம். இனி திமுகவின் வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் பாடுபடுவோம்” என்று பேசினாா்.
அவதூறு வழக்கு – 4 வாரங்களில் பதிலளிக்க சீமானுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்…
