எங்கிருந்து பிரச்சாரம் துவங்குவது என்ற வாக்குவாதத்தில் சினிமா பாணியில் லேசான அடிதடியில் இறங்கிய தவெக ஒன்றிய செயலாளர்கள் உட்பட 6 பேர் மீது முதுகுளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனா்.
ராமநாதபுரம் வெளிப்பட்டிணத்தை சேர்ந்தவர் மலர்விழி ஜெயபாலா. இவர் தவெகவின் கிழக்கு மாவட்ட செயலாளராக உள்ளாா். கமுதியை சேர்ந்தவர் மன்மதன், இவர் மேற்கு மாவட்ட செயலாளராக இருக்கிறார். இரு தரப்பினரும் கட்சி துவங்கியிலிருந்து இரு கோஷ்டிகளாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தலுக்கு முன் மார்ச் 12-ல் ராமநாதபுரத்தில் நடத்தப்பட்ட தவெக ஆர்ப்பாட்டத்திற்கு மன்மதன் வர தாமதம் ஏற்பட்டதாக கூறி மலர்விழி தரப்பினர் ஆர்ப்பாட்டத்தை துவங்கினர். அப்போது அங்கு வந்த மன்மதன் ஆட்சேபனை தெரிவித்தார். இதனால் இரு தரப்புக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தவெகவின் முதுகுளத்தூர் தொகுதி வேட்பாளராக மலர்விழி ஜெயபாலா அறிவிக்கப்பட்டார். அவரும் வேட்பு மனு தாக்கல் செய்து வேட்பு மனுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. முதுகுளத்தூர் தொகுதியில் உள்ள கமுதியை சேர்ந்த தனக்கு சீட்டு வழங்காமல் ராமநாதபுரம் தொகுதியை சேர்ந்த மலர்விழி ஜெயபாலாவிற்கு சீட்டு வழங்கியதால் மன்மதன் அதிருப்தியில் இருந்தார்.
இதனால் மலர்விழி ஜெயபால் வேட்பு மனு தாக்கலின் போது மன்மதன் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். கடந்த 6ஆம் தேதி முதுகுளத்தூர் ஸ்டேட் பேங்க் அருகே பரமக்குடி சாலையில் தவெக தேர்தல் பணிமனை திறந்தனர். அப்போது மன்மதன் ஆதரவு கமுதி கிழக்கு ஒன்றிய செயலாளர் கவாஸ்கர் பிரச்சாரத்தை முதுகுளத்தூரில் இருந்து துவங்க வேண்டும் என கூறியுள்ளார். இதற்கு ஆட்சேபனை தெரிவித்த மலர்விழி ஆதரவு முதுகுளத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன் கமுதிலிருந்து துவங்க வேண்டும் என கூறியுள்ளார்.
இதனையடுத்து இரு தரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பிவிட்டுள்ளனர். இருந்த போதிலும் ஆத்திரம் குறையாத இருவரும் சினிமா பாணியில் ஒருவருக்கொருவர் தனது ஆதரவாளர்களை போனை போட்டு வரவழைத்து ஆதரவளர்களுடன் இரு தரப்பினரும் லேசாக மோதிக் கொண்டனர். அங்கிருந்த மலர்விழி ஜெயபால் சண்டையிடுபவரிடம் நீங்க எல்லாம் விஜய்யோட ரசிகரா நாய்களா என சத்தம் போட்டார். அங்கிருந்த ஒருவர் வார்த்தையை விட வேண்டாம் என மலர்விழி ஜெயபாலை தடுத்து கூட்டிச் சென்றார்
சம்பவம் குறித்து தகவலறிந்து சென்ற முதுகுளத்தூர் போலீசார் இரு தரப்பையும் போலீஸ் நிலையம் வரவழைத்து கவாஸ்கர், குணசேகரன் ஆகிய இருவர் கொடுத்த புகாரின் பேரில் இருவர் உட்பட இருதரப்பிலும் தலா 3 பேர் என 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இருதரப்பினரும் மோதி கொள்ளும் வீடியோ இன்று முதுகுளத்தூர் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
தோல்வியின் உச்சத்துக்கு சென்றதால் விரக்தியில் எடப்பாடி பேசி வருகிறாா் – முதல்வர் விமர்சனம்
