ரீல்ஸ்-யை பாருங்க லைக் போடுங்க, ஓட்டு போடுவதாக இருந்தால் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்குக்கு ஓட்டு போடுங்கள் என உசிலம்பட்டி தேர்தல் பிரசாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் கூறியுள்ளாா்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் காங்கிரஸ் வேட்பாளர் சரவணக்குமாரை ஆதரித்து நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் அவர் வாக்கு சேகரித்தார்.
பிரச்சாரத்தை முடித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கார்த்திக் சிதம்பரம், தேர்தல் சூழல் குறித்து கருத்து தெரிவித்தார். “இன்று ராகுல் காந்தி கன்னியாகுமரிக்கு வருகிறார். தேர்தல் நல்ல முறையில் நடைபெற்று வருகிறது. திமுக–காங்கிரஸ் கூட்டணி வலுவான கூட்டணி; தற்போதைய முதலமைச்சரின் ஆட்சி தொடர வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்” என்றார்.

மேலும், “பாஜக மறைமுகமாக தமிழ்நாட்டில் நுழைய கூடாது என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர். புதிய அரசியல் கட்சிகள் சில தாக்கத்தை ஏற்படுத்தினாலும், அது வெற்றியாக மாறாது என்பதை மக்கள் புரிந்துகொண்டுள்ளனர். அதனால் ஓட்டு வீணாகக் கூடாது என்ற எண்ணமும் உள்ளது” என்று தெரிவித்தார்.
அதிமுக குறித்து விமர்சித்த அவர், “எடப்பாடி பழனிசாமி யாருக்கும் அடிமை இல்லை எனக் கூறினாலும், அவர்களின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது சிறிய பிரச்சினைகளுக்குக் கூட டெல்லிக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. சுயமாக முடிவு எடுக்க முடியவில்லை. பாஜக கொண்டு வரும் பல சட்டங்களுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்; ஆனால் அதிமுக எந்த எதிர்ப்பும் தெரிவிப்பதில்லை” என்று குற்றம்சாட்டினார்.
நடிகர் விஜய் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “அவர் சுயமாக சிந்தித்து பேசுவதில்லை; எழுதிக் கொடுக்கப்படுவது மட்டுமே பேசுகிறார். ஒரு ஸ்டார் நடிகர் என்பது மட்டுமே அரசியலுக்கு போதாது” எனக் கூறினார். அதேவேளை, விஜயின் தனிப்பட்ட குடும்ப விஷயங்களைப் பற்றி கருத்து கூற விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.
இறுதியாக, “சினிமா ஒரு பொழுதுபோக்கு. பெண்கள் ரீல்ஸ் பார்க்கிறார்கள்; ரீல்ஸ் பாருங்கள், லைக் போடுங்கள். ஆனால் வாக்களிக்கும்போது திமுக–காங்கிரஸ் கூட்டணிக்கே வாக்களிக்க வேண்டும்” என்று அவர் வாக்காளர்களை கேட்டுக்கொண்டார்.
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி தீவிர பிரச்சாரம்
