கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் டன் கணக்கில் தேங்கி கிடக்கும் மருத்துவ கழிவுகளை தீ வைத்து எரிக்காமல் அகற்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையானது நகர பகுதியில் அமைந்துள்ள கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தியாகதுருகம், கல்வராயன்மலை மற்றும் கடலூர் மாவட்டம் சிறுபாக்கம், அடரி, வேப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து கர்ப்பிணி தாய்மார்கள் பிரசவத்திற்கு தினந்தோறும் வருகின்றனர்.
தமிழகத்திலேயே கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தான் அதிகபடியான கர்ப்பிணி தாய்மார்களுக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் சுக பிரசவம் பார்க்கப்படுகிறது. இதனால் வெளிமாவட்டத்தில் உள்ள கர்ப்பிணி தாய்மார்கள் கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு வருகை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் பிரசவத்திற்கு பயன்படுத்தக்கூடிய அறுவை சிகிச்சை கழிவுகள், ஊசி, மருத்துவ கழிவுகள், பேண்டேஜி, கைஉறை கிளவுஸ், மருத்துவ ஊழியர்கள் மற்றும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருகின்ற நோயாளிகள் கொண்டு வரப்படுகின்ற பிளாஸ்டிக் பொருட்கள், மருத்துவமனையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் தினந்தோறும் சேகரிக்கின்ற மருத்துவ கழிவுகள் வெளியேற்றாமல் மருத்துவமனை வளாகத்தில் பயன்படுத்தி வந்த பிணவறை பகுதியில் தேக்கிவைக்கப்படுகிறது.
இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் மருத்துவ கழிவுகளை நாள் கணக்கில் தேக்கிவைத்து இரவு நேரங்களில் அங்கு பணியாற்றும் தூய்மை பணியாளர்களை கொண்டு தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால் அந்த மருத்துவமனை வளாகத்தில் சிகிச்சை பெறும் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு நோய் பரவும் அபாயம் இருந்து வருகிறது.
மேலும் மருத்துவமனை வளாகத்தில் தேக்கிவைத்து எரிக்கப்படுகின்ற மருத்துவ கழிவுகளால் மருத்துவமனை பின்புற பகுதியில் வசிக்கின்ற குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது. மேலும் பல்வேறு நோய் தொற்று பரவும் அபாயநிலை இருந்து வருகிறது.
எனவே மகப்பேறு மருத்துவமனையில் அன்றாடம் பயன்படுத்தப்படுகின்ற அறுவை சிகிச்சை மருத்துவ கழிவுகளை தினந்தோறும் சேகரித்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருத்துவமனை வளாகத்தில் மலைபோல் குவித்து டன் கணக்கில் தேக்கி வைக்கப்பட்டுள்ள மருத்துவ கழிவுகளை எரிக்கப்படாமல் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் நலன் கருதி முழுமையாக வெளியேற்ற மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் பவானி ஆகியோர் உத்தரவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு
