மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் நாளை அதிகாலை நடக்க உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.
மதுரையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சித்திரை திருவிழாவின் உச்சகட்ட நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நாளை (மே 1) அதிகாலை நடைபெற உள்ளது. இதற்காக மதுரை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில், முன்னேற்பாடு பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன.
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் கோரிப்பாளையம் அடுத்த ஆழ்வார்புரம் பகுதியில் ஆற்றுப்படுகை சமன்படுத்தப்பட்டு, தூய்மைப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பக்தர்களுக்கான பந்தல்கள், பாதுகாப்புத் தடுப்பு வேலிகள் மற்றும் அலங்கார மின் விளக்குகள் அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

சுமார் 5,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கூட்ட நெரிசலைக் கண்காணிக்க தற்காலிக கோபுரங்கள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆற்றில் நீர் வரத்து இருப்பதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்க நீச்சல் தெரிந்த 50 வீரர்கள் கொண்ட மீட்புக்குழு தயார் நிலையில் உள்ளது.
2025-ல் 8 லட்சம் பேர் பங்கேற்ற நிலையில், இந்த ஆண்டு அதைவிட அதிக பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்காக குடிநீர், தற்காலிக கழிவறைகள் மற்றும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. கள்ளழகர் அழகர் கோவிலில் இருந்து மதுரை வரும் வரை 512 மண்டபப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
நாளை காலை 5.35 மணி முதல் 5:55 மணிக்குள் கள்ளழகர் தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கி அருள்பாலிக்கிறார். அதன்பின்னர், பிற்பகல் 12 மணியளவில் ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், மறுநாள் காலை தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்வும் நடைபெறுகிறது. மே 3-ம் தேதி தசாவதார காட்சி மற்றும் மே 4-ம் தேதி அழகர் திருமலைக்கு திரும்புதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ளது.
குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா கோலாகல கொண்டாட்டம்…
