Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாடு கடற்பரப்பில் கச்சா எண்ணெய் ஆய்வு…ஒன்றிய அரசின் புதிய திட்டம்

தமிழ்நாடு கடற்பரப்பில் கச்சா எண்ணெய் ஆய்வு…ஒன்றிய அரசின் புதிய திட்டம்

-

- Advertisement -

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்பரப்பில் (கடல் பகுதியில்) கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இருப்பு உள்ளதா என ஆய்வு மேற்கொள்ள ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.தமிழ்நாடு கடற்பரப்பில் கச்சா எண்ணெய் ஆய்வு…ஒன்றிய அரசின் புதிய திட்டம்

தமிழ்நாட்டை ஒட்டிய வங்கக் கடற்பரப்பில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளங்கள் உள்ளதா என்பதை கண்டறிய ஒன்றிய அரசு மிகப்பெரிய ஆய்வுத் திட்டத்தை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் எரிபொருள் தேவைகளை இறக்குமதியிலிருந்து குறைத்து, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

we-r-hiring

இந்தத் திட்டத்தின் கீழ் வங்கக் கடல் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டை ஒட்டிய கடற்பரப்பில் மட்டும் சுமார் 30 ஆயிரம் லைன் கிலோமீட்டர் தூரத்திற்கு புவியியல் மற்றும் ஹைட்ரோ கார்பன் வள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதேபோல் மேற்கு வங்கம், பூர்ணியா மற்றும் மகாநதி கடற்பரப்புகளிலும் ஆய்வு நடைபெற உள்ளது. இதற்கான டெண்டரை ஒன்றிய அரசு மே 14ஆம் தேதி கோரியுள்ளது.

இந்திய அரசு மேற்கொள்ள இருக்கும் மிகப்பெரிய ஆழ்கடல் ஹைட்ரோ கார்பன் ஆய்வுகளில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது. திறந்தவெளி பரப்புரிமை கொள்கை (OALP) அடிப்படையில் சென்னை மற்றும் கன்னியாகுமரி அருகிலுள்ள ஆழ்கடல் பகுதிகளில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுப்பதற்காக மொத்தம் நான்கு தொகுதிகளில் சுமார் 32,485 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது.

ஆனால் இந்தத் திட்டங்களுக்கு தமிழக அரசு மற்றும் மீனவர் அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கடல்சார் உயிரியல் வளங்கள் பாதிக்கப்படுவதோடு, மீனவர்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுப்பப்பட்டுள்ளது. குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு, புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி வழங்க முடியாது என்ற உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது.

மேலும், நாகப்பட்டினம் மற்றும் எண்ணூர் பகுதிகளில் கடந்த காலங்களில் ஏற்பட்ட எண்ணெய் கசிவுகள் கடல் சுற்றுச்சூழலுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்கவும், அவசரநிலைகளை சமாளிக்கவும் தமிழக அரசு ‘எண்ணெய் கசிவு எதிர் நடவடிக்கைத் திட்டம்’ ஒன்றையும் தயாரித்துள்ளது. இந்நிலையில், புதிய ஆழ்கடல் ஆய்வுகள் குறித்து மீனவர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் மீண்டும் எதிர்ப்பு குரல் எழுப்பி வருகின்றன. ஒருபுறம் எரிசக்தி தன்னிறைவை நோக்கி ஒன்றிய அரசு நகரும் நிலையில், மறுபுறம் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் மீனவர்களின் வாழ்வாதாரமும் முக்கிய விவாதமாக மாறியுள்ளது.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீதான விலையை மத்திய அரசு உடனடியாக குறைக்க வேண்டும் – எடப்பாடி வலியுறுத்தல்

MUST READ