குறைந்த வட்டி என்று கூறி ஏமாற்றி முத்தூட் ஃபைனான்ஸில் நகை அடகு வைத்த பின்பு அதிக வட்டி விதித்து தனது நகைகளை ஏலம் விடும் நடவடிக்கைக்கு தடை விதிக்க கோரி வழக்கு. இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் மதுரை மண்டல முத்தூட் நிறுவனம் நான்கு வாரத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியைச் சேர்ந்த பெண் ஒருவர், தங்க நகை அடமான கடன் விவகாரத்தில் தன்னை ஏமாற்றியதாகக் கூறி முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்துக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த மனுவில், “குறைந்த வட்டி” என்று கூறி தங்க நகை கடன் பெறத் தூண்டப்பட்டதாகவும், பின்னர் ஆண்டுக்கு சுமார் 24 சதவீதம் வரை அதிக வட்டி விதிக்கப்பட்டதாகவும் மனுதாரர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தனது விருப்பத்திற்கு எதிராக தனிநபர் கடனும் பெற்றுக் கொள்ளச் செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மனுதாரர் கூறுகையில், வீட்டுவேலை செய்து சேமித்த தங்க நகைகளை தனது மகளின் எதிர்காலத்திற்காக வைத்திருந்த நிலையில், முதலில் இந்தியன் வங்கியில் நகைக்கடன் பெற்றிருந்தார். பின்னர் முத்தூட் ஃபைனான்ஸ் ஊழியர்கள் குறைந்த வட்டி என கூறியதை நம்பி அந்த கடனை முடித்து நகைகளை அந்த நிறுவனத்தில் அடமானம் வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
பின்னர் பல்வேறு நகைக்கடன்கள் மூலம் சுமார் ரூ.7 லட்சத்திற்கும் அதிகமாக கடன் பெற்ற நிலையில், பொருளாதார நெருக்கடி காரணமாக வட்டி செலுத்த முடியாத சூழல் உருவானதாகவும், இதையடுத்து அவரது கணக்குகள் முடக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில், 2025 ஜூன் 19ஆம் தேதி ரிசர்வ் வங்கியின் குறைதீர் அலுவலரிடம் புகார் அளித்திருந்தும், “சேவையில் குறைபாடு இல்லை” எனக் கூறி 2025 நவம்பர் 17ஆம் தேதி புகார் நிராகரிக்கப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, 2026 பிப்ரவரி 24 மற்றும் மார்ச் 2ஆம் தேதிகளில் நகைகளை ஏலத்தில் விடுவதாக முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனம் அறிவிப்பு அனுப்பியதைத் தொடர்ந்து, அந்த ஏல நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், ரிசர்வ் வங்கியின் உத்தரவை ரத்து செய்து தனது புகாரை மீண்டும் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி விக்டோரியா கௌரி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் முத்தூட் ஃபைனான்ஸ் மதுரை மண்டல அலுவலகம் ஆகியவை நான்கு வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. பின்னர் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் தலைமறைவாக இருந்த கணவர் கைது…
