Homeசெய்திகள்சென்னைசென்னை புறநகரில் தொடரும் மாடு திருட்டு…அச்சத்தில் கால்நடை விவசாயிகள்…

சென்னை புறநகரில் தொடரும் மாடு திருட்டு…அச்சத்தில் கால்நடை விவசாயிகள்…

-

- Advertisement -

சென்னை புறநகர் பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் மாடு திருட்டு சம்பவங்கள் கால்நடை விவசாயிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஆவடி, அம்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் லோடு வேன்களில் வந்து மர்ம நபர்கள் மாடுகளை திருடிச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த சம்பவங்கள் தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை புறநகரில் தொடரும் மாடு திருட்டு…அச்சத்தில் கால்நடை விவசாயிகள்…சென்னை அம்பத்தூர் ராம்பூர்ணம் நகரை சேர்ந்த இளங்கோ என்பவர் 20-க்கும் மேற்பட்ட மாடுகள் மற்றும் ஆடுகளை வைத்து கால்நடை விவசாயம் செய்து வருகிறார். கடந்த 19-ஆம் தேதி அவரது மாட்டு கொட்டகையில் இருந்த 3 பசு மாடுகள் காணாமல் போயுள்ளது. நீண்ட நேரமாகியும் மாடுகள் வீடு திரும்பாததால் அவர் பல இடங்களில் தேடியுள்ளார். பின்னர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, பொலிரோ லோடு வேனில் வந்த மர்ம நபர்கள் மாடுகளை ஏற்றி திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் கடந்த 5 நாட்களாக புகார் அளிக்கச் சென்றும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக நடந்து கொண்டதாக இளங்கோ குற்றம்சாட்டியுள்ளார். இதேபோன்று அம்பத்தூரில் நேற்று மேலும் 5 மாடுகள் திருடப்பட்டதாகவும், லோடு வேனில் வந்த கும்பல் அவற்றை கடத்திச் சென்றதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஆவடி கண்ணடப்பாளையம் பகுதியில் 3 மாடுகள் திருடப்பட்ட சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

we-r-hiring

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் 200-க்கும் மேற்பட்ட மாடுகள் திருடப்பட்டுள்ளதாக கால்நடை விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். காவல்துறையிடம் புகார் அளித்தாலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், விவசாயிகளே குழுக்கள் அமைத்து திருடர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று இரவு திருடர்களை பின்தொடர்ந்து சென்றபோது, அவர்கள் மதுரவாயல் பகுதியில் தப்பிச் சென்றதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். பதிவு எண் இல்லாத வாகனங்கள் சாலைகளில் எவ்வாறு சுதந்திரமாக இயங்குகின்றன என்றும், மாடுகளை ஏற்றி செல்லும் வாகனங்களை காவல்துறையினர் கண்காணிக்காதது ஏன் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

திருடப்பட்ட மாடுகள் பெங்களூரு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு கடத்தப்படுவதாகவும் விவசாயிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து நடைபெறும் இந்த மாடு திருட்டு சம்பவங்களை தடுக்க காவல்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கால்நடை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

10ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவா்களுக்கு சென்னை மாநகராட்சியின் சிறப்பு பயிற்சி

MUST READ