பாஜக மாநில தலைவராக அண்ணாமலை சிறப்பாக செயல்பட்டதாகவும் புதிதாக கட்சி தொடங்கவுள்ள அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்களின் 131-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் போர்வை அணிவித்து மரியாதை செலுத்திய விசிக தலைவர் தொல். திருமாவளவன், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் புதியதாக உருவாகியுள்ள தவெக அரசின் நிர்வாகம் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும், காயிதே மில்லத்தின் பெயரில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும் என்றும், அவரது பெயரில் அரசு விருது வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
பிரவீன் சக்கரவர்த்தி தொடர்பான விவகாரம் குறித்து கேட்கப்பட்டபோது, அவர் வேட்புமனு தாக்கல் செய்வது குறித்து தமக்கு தொலைபேசியில் தகவல் அளித்ததாகவும், தாம் கட்சி நிகழ்ச்சிக்காக வெளியூரில் இருந்ததால் விசிக சார்பில் மற்றொரு நிர்வாகி பங்கேற்றதாகவும் தெரிவித்தார். மேலும், தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணியில் விசிக இடம்பெற்றுள்ளதாக வெளியான பதிவுகள் குறித்து தங்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறினார்.
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை புதிய கட்சி தொடங்க உள்ளதாக வெளியாகும் தகவல்கள் குறித்து கேட்கப்பட்டபோது, “அண்ணாமலைக்கு பாஜகவில் என்ன கசப்பு ஏற்பட்டது என்பது தெரியாது. முழு விவரங்கள் தெரியாமல் கருத்து கூறுவது சரியல்ல. ஆனால், அவர் மாநில தலைவராக இருந்த காலத்தில் சிறப்பாக பணியாற்றினார் என்பதை யாரும் மறுக்க முடியாது. அவர் புதிய கட்சி தொடங்கினால் அவருக்கு எனது வாழ்த்துக்கள்” என்று திருமாவளவன் தெரிவித்தார்.
திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக அண்மையில் ஏற்பட்ட கோஷ மோதல்கள் குறித்து பேசிய அவர், பத்தாண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த கூட்டணியில் தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்ட மாற்றங்களை கட்சி தொண்டர்கள் உடனடியாக ஏற்றுக்கொள்வது எளிதல்ல என்றார். தலைவர்களிடையே புரிதல் இருந்தாலும், அந்த மனநிலை இன்னும் அடிமட்ட தொண்டர்களிடம் முழுமையாக உருவாகாததன் வெளிப்பாடாகவே இத்தகைய சம்பவங்கள் நடைபெறுகின்றன என்றும், இது வருத்தம் அளிக்கும் விஷயம் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், அமைச்சரவை கூட்டத்தில் விசிக அமைச்சர் வன்னியரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்ததாக தெரிவித்தார். பழங்குடியினர் சமூகத்தின் கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக நிலை தொடர்பான விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதைப் போல, தமிழ்நாட்டில் முழுமையான சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவர் வலியுறுத்தியதாக கூறினார். திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் வன்னியரசுவுக்கு கள்ளக்குறிச்சியில் பொறுப்பு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது குறித்த கேள்விக்கு, “அதுவும் தமிழ்நாட்டின் ஒரு பகுதிதான்” என்று சுருக்கமாக பதிலளித்தார்.
“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன்
