Homeசெய்திகள்சென்னைஆம்னி பேருந்துகள் தொடர்பான அரசின் உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்றம்..

ஆம்னி பேருந்துகள் தொடர்பான அரசின் உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்றம்..

-

- Advertisement -

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டாயமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து மட்டுமே புறப்பட வேண்டும் என்ற மாநில போக்குவரத்து ஆணையத்தின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.ஆம்னி பேருந்துகள் தொடர்பான அரசின் உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்றம்..கடந்த 2024 ஜனவரியில் மாநில போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட உத்தரவின் மூலம், தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், சென்னை நகருக்குள் நுழையக் கூடாது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக தனியார் பேருந்து நிறுவனங்கள் மற்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. வழக்கின் இடைக்கால விசாரணையின்போது, போரூர் மற்றும் சூரப்பட்டு பகுதிகளில் பயணிகளை ஏற்றவும் இறக்கவும் அனுமதி வழங்கிய நீதிமன்றம், அதே நேரத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்குள் சென்று சேவையை மேற்கொள்ளவும் உத்தரவிட்டிருந்தது.

we-r-hiring

இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி லட்சுமி நாராயணன் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளின்படி பேருந்து முனையத்திற்கு ஒப்புதல் பெறுவதற்கான விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பே தாக்கல் செய்ய வேண்டும் என்றும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (CMDA) அதற்கான விண்ணப்பத்தை அளிக்க முடியாது என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

இதையடுத்து, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு தேவையான ஒப்புதலைப் பெற காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியம் மாநில போக்குவரத்து ஆணையத்தை அணுகலாம் என நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், ஏற்கனவே குறிப்பிட்ட வழித்தடங்களில் பேருந்துகளை இயக்க உரிமம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அவற்றின் இயக்கத்தை கட்டுப்படுத்த முடியாது என்று கூறிய நீதிபதி, கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்ற மாநில போக்குவரத்து ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.

அதேபோல், போக்குவரத்துத்துறை அதிகாரிகள் மற்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் இடையே நடைபெற்ற ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவுகளையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. அதன்படி, போரூர் சுங்கச்சாவடி மற்றும் சூரப்பட்டு பகுதிகளுடன், மாதவரம் ரவுண்டானா அருகிலுள்ள இடத்தையும் பயணிகள் ஏற்றும் மற்றும் இறக்கும் மையமாக பயன்படுத்த வேண்டும் என்ற முடிவை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பரபரப்பு: காயிதே மில்லத் நினைவிடத்தில் திமுக – காங்கிரஸ் தொண்டர்கள் மோதல்; தள்ளுமுள்ளு!

MUST READ