Homeசெய்திகள்தமிழ்நாடு”இருமொழிக் கொள்கை தொடரும்; புதிய கல்விக் கொள்கை மறுப்பு” - ஆளுநர் உரையில் தவெக அரசின்...

”இருமொழிக் கொள்கை தொடரும்; புதிய கல்விக் கொள்கை மறுப்பு” – ஆளுநர் உரையில் தவெக அரசின் முக்கிய அறிவிப்புகள்!!

-

- Advertisement -

தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை மட்டுமே தொடரும் என்றும், ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கை (NEP 2020) மற்றும் மும்மொழிக் கொள்கை ஏற்கப்படாது என்றும் தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.”இருமொழிக் கொள்கை தொடரும்; புதிய கல்விக் கொள்கை மறுப்பு” - ஆளுநர் உரையில் தவெக அரசின் முக்கிய அறிவிப்புகள்!!

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடர் இன்று ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் உரையுடன் தொடங்கியது. தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான புதிய அரசின் முதல் முழுமையான சட்டப்பேரவைக் கூட்டத்தொடராக அமைந்த இந்த அமர்வில், அரசின் கொள்கை நிலைப்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து ஆளுநர் விரிவாக எடுத்துரைத்தார்.

we-r-hiring

கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியதையடுத்து தேசிய கீதம் பாடப்பட்டது. பின்னர் ஆளுநர் தனது உரையை வாசித்தார். தனது உரையில் பெரியார், அண்ணா, காமராஜர், அம்பேத்கர், வேலு நாச்சியார் மற்றும் அஞ்சலை அம்மாள் ஆகியோரை நினைவுகூர்ந்த அவர், சமூக நீதி மற்றும் மாநில உரிமைகளை முன்னிறுத்தும் ஆட்சியாக தற்போதைய அரசு செயல்படும் என குறிப்பிட்டார்.  தமிழகத்தில் கூட்டணி ஆட்சியின் மூலம் புதிய அரசியல் அத்தியாயம் தொடங்கியுள்ளதாகவும், மாநில வளர்ச்சிக்காக பல்வேறு துறைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் உரையில் தெரிவிக்கப்பட்டது.

மாநிலத்திற்கு உரிய நிதிப்பங்கீட்டை ஒன்றிய அரசிடமிருந்து பெறுவதற்காக சட்டவல்லுநர் குழு அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நிதி தொடர்பான அனைத்து விவரங்களும் ஆவணப்படுத்தப்பட்டு, ஒன்றிய அரசின் அணுகுமுறை குறித்த அறிக்கை வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. கல்வித்துறையைப் பொறுத்தவரை, தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும் என்றும், புதிய கல்விக் கொள்கையை அரசு ஏற்காது என்றும் ஆளுநர் உறுதிபட தெரிவித்தார். கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

போதைப்பொருள் ஒழிப்பை அரசின் முக்கிய இலக்குகளில் ஒன்றாகக் குறிப்பிட்ட ஆளுநர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான சூழலை உருவாக்க கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார். வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகே செயல்பட்டு வந்த 717 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். விவசாயத் துறையில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான ரூ.75 ஆயிரம் வரையிலான பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், நீர்நிலைகளில் இருந்து வண்டல் மண் எடுப்பதற்கு விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

”இருமொழிக் கொள்கை தொடரும்; புதிய கல்விக் கொள்கை மறுப்பு” - ஆளுநர் உரையில் தவெக அரசின் முக்கிய அறிவிப்புகள்!!

மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்தின் சட்டப் போராட்டம் தொடரும் என்றும், முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டும் கேரள அரசின் முயற்சிகளை எதிர்த்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உரையில் தெரிவிக்கப்பட்டது. சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு விரைவாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்திய ஆளுநர், அதன் பின்னர் தமிழக அரசு சமூக நீதி சர்வே மேற்கொள்ளும் என அறிவித்தார். அதேபோல், 69 சதவீத இடஒதுக்கீடு பாதுகாக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது.

தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் ஒற்றைச் சாளர முறையில் அனுமதிகள் வழங்கப்படும் என்றும், புதிய முதலீடுகளை ஈர்க்க சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டது. 2031-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் முன்னோடி மாநிலமாக தமிழகம் உருவாக வேண்டும் என்பதே அரசின் இலக்கு என ஆளுநர் தெரிவித்தார். இந்து சமய அறநிலையத் துறையில் நிர்வாக ரீதியான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், மீனவர் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆளுநர் தனது உரையில் வலியுறுத்தினார். மொத்தத்தில், மாநில உரிமைகள், கல்வி, சமூக நீதி, விவசாயம், தொழில் வளர்ச்சி மற்றும் நல்லாட்சியை மையமாகக் கொண்டு செயல்படும் தவெக அரசின் கொள்கை நோக்கங்களை ஆளுநர் உரை வெளிப்படுத்தியுள்ளது.

பங்களிப்பு ஓய்வூதியதாரர்களுக்கு நிம்மதி – இடைக்கால நிவாரணம் அறிவித்த தமிழக அரசு

MUST READ