Homeசெய்திகள்தமிழ்நாடுரூ.1,000 கோடி குதிரை பேரம் புகார்…தவெக அரசுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்…

ரூ.1,000 கோடி குதிரை பேரம் புகார்…தவெக அரசுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்…

-

- Advertisement -

தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு பெரும்பான்மையை நிரூபிக்க குதிரை பேர அரசியலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.ரூ.1,000 கோடி குதிரை பேரம் புகார்…தவெக அரசுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்…

2026ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், தனிப்பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையை பெறவில்லை. இதையடுத்து காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியமைத்தது. கட்சித் தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்றார்.

we-r-hiring

இந்த நிலையில், கடந்த மே 13ஆம் தேதி தமிழக அரசின் பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுப்பின் போது திமுக, தேமுதிக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட 58 பேர் வெளிநடப்பு செய்தனர். இதனால் அவையில் 171 உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றனர். நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 144 உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவாகவும், 22 உறுப்பினர்கள் எதிராகவும், 5 உறுப்பினர்கள் நடுநிலையாகவும் வாக்களித்தனர். இதன் மூலம் தவெக அரசு சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபித்தது.

எனினும், அரசுக்கு ஆதரவாக வாக்களித்தவர்களில் அதிமுகவைச் சேர்ந்த எஸ்.பி. வேலுமணி தலைமையிலான 25 எம்எல்ஏக்களும் இருந்ததாக கூறப்பட்டது. கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை மீறி அவர்கள் வாக்களித்ததாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பெரும்பான்மையை பெறுவதற்காக ரூ.1,000 கோடி அளவுக்கு குதிரை பேரம் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும், விசாரணை நிறைவடையும் வரை தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பொதுநல வழக்காக விசாரிக்க ஏதுவானவை அல்ல என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து மனுவை ஏற்க மறுத்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதன் மூலம், தவெக அரசு மீதான குதிரை பேர குற்றச்சாட்டு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிமன்றத்தில் ஆரம்ப கட்டத்திலேயே நிராகரிக்கப்பட்டுள்ளது.

வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்; பெண்கள் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் – எல்.முருகன் வலியுறுத்தல்

MUST READ