ஒரு மாநில முதலமைச்சர் நினைத்தால் தனது அதிகார வரம்பிற்கு உட்பட்ட எந்தப் பதவிக்கும் யாரையும் நியமிக்கலாம்; புதிய பதவிகளையும் உருவாக்கலாம். ஆனால், ‘தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி’ என்ற பதவி, அப்படி புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்றல்ல. அது மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாக்கும் மிக முக்கியப் பாரம்பரியப் பதவி!
மாநிலங்களை ஆளும் அனைத்துக் கட்சிகளுமே தங்களின் மிக ஆளுமைமிக்க, அரசியல் முதிர்ச்சி கொண்ட ஒருவரைத்தான் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக அனுப்பி வைக்கும். மாநில அமைச்சர் அந்தஸ்து, தனி அலுவலகம், நேர்முக உதவியாளர், தனிச்செயலர் எனப் பணிக்காலம் முழுவதும் சகல மரியாதைகளுடன் டெல்லியில் கவனித்துக் கொண்டாடப்படும் பதவி அது.

அப்படி என்னதான் செய்கிறார் டெல்லி சிறப்பு பிரதிநிதி?
உதாரணமாக, தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்திப் படகுகளைப் பறித்துச் சென்றுவிட்டதாக வையுங்கள். முதலமைச்சரோ அல்லது தலைமைச் செயலரோ பதற்றப்படாமல் டெல்லி பிரதிநிதியை ஹாட் லைனில் பிடித்துத் தகவலைச் சொன்னால் போதும். அவர் உடனடியாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் மாண்புமிகு ஜெய்சங்கரை நேரில் சந்தித்து, பிரச்சினையைப் பேசி சுமுகமாக முடிக்க வேண்டும்.
அப்படிப் பேசும்போது, “தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்குமான மோதல் போக்கின் அடிப்படை என்ன, எந்த ஆண்டிலிருந்து இது நடக்கிறது?” என்று வெளியுறவுத்துறை அமைச்சர் கேட்டால்… கச்சத்தீவு விவகாரம் தொடங்கி, கடல் எல்லைச் சட்டம், சாஸ்திரி – ஸ்ரீலங்கா ஒப்பந்தம், பண்டாரநாயக்க – நேரு பேச்சுவார்த்தைகள் வரை அனைத்தையும் ஆதியந்தமாக வரிசையாக அடுக்கத் தெரிந்திருக்க வேண்டும். டெல்லியில் நம் பிரதிநிதி பேசும் பேச்சில், ஒன்றிய அமைச்சர் திருப்தியில்லாமல் உதட்டைப் பிதுக்கினால், அங்கு கடலில் நம் தமிழ்நாட்டு மீனவனின் வாழ்க்கை பிதுங்கிவிடும் என்ற நுண்ணறிவும், ராஜதந்திரமும் அவரது ரத்தத்தில் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்!
ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பேச்சுவார்த்தை நீடித்தாலும், ஒன்றிய அமைச்சர்தான் களைத்துப் போக வேண்டுமே தவிர, தமிழ்நாட்டின் பிரதிநிதி சளைக்கக் கூடாது. மீனவர் பிரச்சினை மட்டுமன்றி நீட் (NEET), இருமொழிக்கொள்கை, முல்லைப்பெரியாறு, நவோதயா பள்ளிகள் எனத் தமிழ்நாட்டின் வாழ்வாதாரம் மற்றும் உணர்வுநிலையோடு பின்னிப்பிணைந்த அத்தனை விவகாரங்களும் அவருக்கு அக்குவேர் ஆணிவேராகத் தெரிந்திருக்க வேண்டும். 1956 மொழிவாரி மாகாணப் பிரிப்பு முதல் 2026 வரையிலான தமிழகத்தின் அரசியல் வரலாற்றைப் போகிற போக்கில் ‘கில்லி’யாகச் சொல்லி அடிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சினிமா வேறு; பிள்ளை வளர்ப்பு போன்ற அரசியல் வேறு!
தற்போதைய மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களால், டெல்லி பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள வெங்கட நாராயணா ஒரு கர்நாடகக்காரர், சினிமா படத் தயாரிப்பாளர் என்கிறார்கள். தமிழ்நாட்டின் அத்தனை ஜீவாதாரப் பிரச்சினைகளையும் நன்கு அறிந்த நபர் என்று முதலமைச்சர் இவரைக் கருதுகிறார் போல… சரி, கருதட்டும்!
டெல்லியில் இருந்தபடியே கர்நாடக மாநில ஆட்சியாளர்களுடன் பேசி, காவிரி நதிநீர் விவகாரத்திற்கு இவர் முற்றுப்புள்ளி வைப்பார்; அதற்கு இவருக்குத் தகுதி இருக்கிறது என்று முதலமைச்சர் நினைக்கிறார்… நினைக்கட்டும், நினைத்துக் கொண்டு போகட்டும்! ஆனால், அனல் பறக்கும் வாழ்வாதாரப் பிரச்சினைகளோடு வாழும் ஒரு மாநிலம், தன் பிரதிநிதியாக டெல்லிக்கு அனுப்பி வைக்கும் நபர், அத்தனை லேசுப்பட்ட நபராக இருக்க முடியாது என்பதுதான் கடந்த கால வரலாறு.
நமக்கு ஒருவரைப் பிடிக்கும் என்பதற்காக வயது, கல்வி, சமூக மதிப்பு, வகிக்கும் பொறுப்பு என எல்லாவற்றையும் மறந்து ‘விசில்’ அடித்துக் கொண்டாடும் ரசிக மனநிலை, நமக்கு பிடித்த அந்த நபரின் அரசியல் எதிர்காலத்திற்கே மொத்தமாகச் சங்கு ஊதி முடித்துவிடும். அரசியல் என்பது ‘பிள்ளை வளர்ப்பு’ போன்றது; அதில் அசாத்திய பொறுப்புணர்வு வேண்டும். அரசுப் பதவிகள் என்பவை ரசிகர்களுக்கான ‘சினிமா கால்ஷீட்’ அல்ல; அது 8 கோடி மக்களின் உரிமைகளுக்கான களம் என்பதைப் புதிய த.வெ.க அரசு எப்போது உணரப் போகிறது?
