
ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி, டீசல் டேங்க் வெடித்து தீப்பிடித்ததில் இரண்டு ஓட்டுநர்கள் மற்றும் இரண்டு கிளீனர்கள் கேபினுக்குள்ளேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
டீசல் தீர்ந்ததால் சாலையில் நின்ற லாரி:

பல்நாடு மாவட்டம் பிரதிபாடு மண்டலம், தும்மலபாலேம் பஞ்சாயத்து போயபாலயத்தில் உள்ள 16-வது தேசிய நெடுஞ்சாலையில் (NH 16) லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. போயபாலேம் பகுதியில் வந்தபோது அந்த லாரியில் டீசல் தீர்ந்துபோனதால், சாலையின் நடுவிலேயே நின்றுள்ளது. ஆனால், ஓட்டுநர் எந்தவொரு அபாய எச்சரிக்கை பலகையையோ (Danger Indicator/Reflector) அங்கு வைக்காமல் அலட்சியமாக லாரியை நிறுத்தி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

கட்டுப்பாட்டை இழந்த லாரி :
அதே நேரத்தில், சிலகலூரிபேட்டையிலிருந்து குண்டூர் நோக்கி அதிவேகமாக வந்த மற்றொரு லாரியின் ஓட்டுநர் , நடுரோட்டில் நின்ற லாரியைக் கண்டு திடீரென பிரேக் போட்டு நிறுத்த முயன்றுள்ளார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலயின் நடுவில் இருந்த தடுப்புச் சுவரை (Median) உடைத்துக் கொண்டு மறுபக்கச் சாலைக்கு பாய்ந்தது.
நேருக்கு நேர் மோதி வெடித்த டீசல் டேங்க் :
அப்போது எதிர்பாராதவிதமாக, குண்டூரிலிருந்து சிலகலூரிபேட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த மற்றொரு லாரி மீது இந்த லாரி நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் லாரியின் டீசல் டேங்க் பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியதில், இரண்டு லாரிகளிலும் நொடிகளில் தீ மளமளவென பரவி எரியத் தொடங்கின.

”பிள்ளைகள் இருக்கிறார்கள், காப்பாற்றுங்கள்” – மரண ஓலம்
விபத்து நடந்த உடனேயே லாரியின் இடிபாடுகளுக்குள் (கேபினில்) சிக்கிக்கொண்ட ஓட்டுநர் ஒருவர், உடல் மீது தீப்பற்றிய நிலையில், “அண்ணா என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள்.. தீயை அணையுங்கள்.. எனக்குச் சின்னக் குழந்தைகள் இருக்கிறார்கள் அண்ணா..” என்று கதறி அழுதுள்ளார். விபத்தை அறிந்து ஓடிவந்த உள்ளூர் மக்கள் மற்றும் சக வாகன ஓட்டிகள் அவர்களைக் காப்பாற்றப் போராடினர். ஆனால், லாரியின் கேபின் முழுவதும் தீ அசுர வேகத்தில் பரவி கொழுந்துவிட்டு எரிந்ததில் பொதுமக்களால் நெருங்க முடியாமல் போனது.
தாமதமாக வந்த தீயணைப்பு வாகனம்
தகவலறிந்து தீயணைப்புத் துறையினரும், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் லாரியில் சிக்கிய நால்வரும் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்குத் தீயணைப்பு வாகனமும், போலீசாரும் தாமதமாக வந்ததாகக் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்தக் கொடூர விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இதையடுத்து போலீசார் வாகனங்களை மாற்றுப் பாதையில் திருப்பிவிட்டனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, நடுரோட்டில் எச்சரிக்கைப் பலகை வைக்காமல் லாரியை நிறுத்திய ஓட்டுநரின் அலட்சியம் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
