Homeசெய்திகள்தமிழ்நாடுகன்னியாகுமரி அணுக்கனிமச் சுரங்கத் திட்ட அரசாணையை திரும்பப் பெற வேண்டும் – சி.பி.ஐ. வலியுறுத்தல்

கன்னியாகுமரி அணுக்கனிமச் சுரங்கத் திட்ட அரசாணையை திரும்பப் பெற வேண்டும் – சி.பி.ஐ. வலியுறுத்தல்

-

- Advertisement -

கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிமச் சுரங்கத் திட்டத்திற்காக இந்தியன் ரேர் எர்த்ஸ் லிமிடெட் (IREL) நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நில ஒதுக்கீட்டு அனுமதியை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள அரசாணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (CPI) வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் அதன் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் விடுத்துள்ள ஊடக அறிக்கை:
கன்னியாகுமரி

மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஆபத்து:
கன்னியாகுமரி மாவட்டத்தில் 1,144 ஹெக்டேர் பரப்பளவில் அணுக்கனிமச் சுரங்கம் அமைக்க தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நில ஒதுக்கீட்டு அனுமதியை தமிழ்நாடு அரசு நீட்டித்துள்ளது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இது வெறும் நிர்வாக ரீதியான நடவடிக்கை அல்ல; ஒட்டுமொத்த பொதுமக்களாலும் கடுமையாக எதிர்க்கப்பட்டு வந்த ஒரு திட்டத்திற்கு மீண்டும் உயிர் கொடுக்கும் அரசியல் முடிவாகும்.
​இந்த நீட்டிப்பின் மூலம், சுற்றுச்சூழல் மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டல (CRZ) அனுமதிகளைப் பெற்று திட்டத்தை முன்னெடுக்க அந்நிறுவனத்திற்கு அரசே வழிவகை செய்து கொடுத்துள்ளது. இதனால் கன்னியாகுமரியின் கடலோரச் சூழல், நிலத்தடி நீர்மட்டம், விவசாயம் மற்றும் மீனவ மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

we-r-hiring

​தேர்தல் வாக்குறுதிக்கு எதிரானது:
தமிழ்நாட்டின் இயற்கை வளங்களையும், சுற்றுச்சூழலையும் பாதுகாப்போம் என்ற தேர்தல் வாக்குறுதியை வழங்கி ஆட்சிக்கு வந்த தவெக அரசு, தற்போது அதற்கு நேர்மாறான பாதையில் செல்ல முயல்வது முறையல்ல. அரசு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டுமே தவிர, ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை அப்படியே ஏற்பது கூடாது. பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு, “முக்கிய மற்றும் அணுக்கனிமங்கள்” என்ற பெயரில் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங்களை தொடர்ந்து பலவீனப்படுத்தி வருகிறது. பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்களைக் கைவிட்டு, மாநிலங்களின் உரிமைகளையும் கூட்டாட்சிக் கோட்பாட்டையும் புறக்கணித்து, கார்ப்பரேட் நிறுவனங்கள் இயற்கை வளங்களைச் சூறையாடுவதற்கு பாதையமைத்துக் கொடுக்கிறது. இது மக்கள் நலனுக்கான வளர்ச்சி அல்ல; கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்திற்கான வளர்ச்சி.

அரசாணையை ரத்து செய்க:
எனவே, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள இந்த நில ஒதுக்கீட்டு நீட்டிப்பு அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். சம்பந்தப்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் கருத்துக் கேட்பை மீண்டும் கட்டாயமாக்கி, கடுமையான சுற்றுச்சூழல் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
​கன்னியாகுமரியின் கடலோரச் சூழலையும், எதிர்காலத் தலைமுறையினரின் வாழ்வுரிமையையும் பாதுகாக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். ஒன்றிய அரசின் கூட்டாட்சிக்கு எதிரான, சுற்றுச்சூழலை அழிக்கும் கொள்கைகளுக்கு எதிராக மாநில அரசு உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள் மக்களின் பொதுச் சொத்தாகும்; அவை அரசுகளின் அல்லது தனியார் நிறுவனங்களின் லாபத்திற்காக ஒப்படைக்கப்படக் கூடாது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

MUST READ