பயணிகளின் தொடர் நெரிசலைச் சமாளிக்கும் வகையில் தற்பொழுது இயக்கப்பட்டு வரும் 8 முக்கியச் சிறப்பு ரயில்களின் சேவை காலத்தைத் தெற்கு ரயில்வே மேலும் நீட்டித்துள்ளது. இந்த ரயில்கள் அனைத்தும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நேரம், நிறுத்தங்கள் மற்றும் வழித்தடங்களின்படியே தொடர்ந்து இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட்டிக்கப்பட்ட புதிய சேவையின்படி, திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் (06030) ஞாயிற்றுக்கிழமைகளிலும், மறுமார்க்கமாக மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி சிறப்பு ரயில் (06029) திங்கட்கிழமைகளிலும் ஜூலை 5 முதல் ஜூலை 27 வரை தலா 4 பயணங்கள் இயக்கப்படும். அதேபோல், தென் மாவட்டப் பயணிகளின் வசதிக்காகத் திருநெல்வேலி – தாம்பரம் சிறப்பு ரயில் (06166) ஞாயிற்றுக்கிழமைகளிலும், தாம்பரம் – திருநெல்வேலி சிறப்பு ரயில் (06165) திங்கட்கிழமைகளிலும் ஜூலை 5 முதல் ஜூலை 27 வரை தலா 4 முறை இயக்கப்பட உள்ளன.

மேலும், தூத்துக்குடி – தாம்பரம் சிறப்பு ரயில் (06018) திங்கட்கிழமைகளிலும், தாம்பரம் – தூத்துக்குடி சிறப்பு ரயில் (06017) செவ்வாய்க்கிழமைகளிலும் ஜூலை 6 முதல் ஜூலை 28 வரை தலா 4 பயணங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன. சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி சிறப்பு ரயில் (06045) வெள்ளிக்கிழமைகளிலும், கன்னியாகுமரி – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (06046) ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஜூலை 10 முதல் ஆகஸ்ட் 2 வரை தலா 4 பயணங்கள் இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
பயணிகளின் வசதிக்காக, சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில்களின் (06045/06046) பெட்டிகள் அமைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ரயிலில் இனி 3 ஏசி 3-அடுக்கு பெட்டிகள், 11 ஸ்லீப்பர் பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள் மற்றும் 2 லக்கேஜ்-கம்-பிரேக் வேன்கள் இணைக்கப்படும். திருநெல்வேலி – மேட்டுப்பாளையம், திருநெல்வேலி – தாம்பரம் மற்றும் தூத்துக்குடி – தாம்பரம் ஆகிய சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை (ஜூலை 4) காலை 8.00 மணி முதல் தொடங்கும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பாளையங்கோட்டை மத்திய சிறை வாசலில் தப்பியோடிய கைதி 24 மணி நேரத்தில் கைது
