
“தமிழகத்தில் குதிரை பேரம் நடப்பதாக விவாதங்கள் எழுந்தும், அதிமுக தலைமை ஏன் மௌனம் காக்கிறது?” என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் தொடர்பில்லாத தங்களிடம் கேள்வி கேட்பது அர்த்தமற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழகத்தில் நிலவும் பல்வேறு முக்கிய அரசியல் விவகாரங்கள் குறித்துப் பேசினார். அவர் கூறியதாவது:

அதிமுக மௌனம் காப்பது ஏன்?
முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஆதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக-வில் இணைந்தது மற்றும் ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த திருமாவளவன்:
”அதிமுகவிலிருந்து ஆட்களை வெளியேற்றி குதிரை பேரம் நடப்பதாக விவாதங்கள் எழுந்தாலும், அதுகுறித்து அதிமுக தலைவர்கள் வாய் திறக்காமல் இருப்பது ஏன்? ஆவேசப்பட வேண்டியவர்கள், தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராகக் கொந்தளிக்க வேண்டியவர்கள் அமைதி காப்பதன் பொருள் என்ன?
அவர்கள் ஆளுநரிடம் புகார் அளிக்கிறார்களே தவிர, ‘எங்கள் கட்சியைச் சீர்குலைக்கப் பார்க்கிறார்கள், இதை அனுமதிக்க மாட்டோம்’ என்று மக்கள் மத்தியில் முறையிடவில்லை. அதிமுகவை முற்றிலும் தவெக-வில் இணைப்போம் என்று சொல்வது சரியா, இதில் அரசியல் அறம் இருக்கிறதா என்று நீங்கள் (ஊடகங்கள்) தான் கேட்க வேண்டும்.”
தொடர்பில்லாத எங்களிடம் கேள்வி கேட்காதீர்கள்!
”குதிரை பேரத்தில் ஈடுபடுவது தவெக-வோ அல்லது திமுக-வோ என்றால், நேரடியாக அந்தந்த தலைமையிடம் கேள்வி கேளுங்கள். பாதிக்கப்படும் அதிமுக தலைமையிடமும் கேள்வி எழுப்புங்கள். அதை விடுத்து, இதில் எந்தத் தொடர்பும் இல்லாத எங்களிடம் கேள்வி எழுப்பி, ‘திருமாவளவன் ஏன் மழுப்புகிறார்?’ என்று பேசுவது அரசியல் புரிதல் இல்லாத செயலாகும்” என்று சாடினார். மேலும், குதிரை பேரம் புகார் உண்மையாக இருந்தால், ஆளுநருக்கு அதிகாரம் இருக்கும் பட்சத்தில் அவர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கட்டும் என்றும் தெரிவித்தார்.

தவெக கூட்டணி குறித்து அடுத்தகட்ட முடிவு
தவெக தலைமையிலான கூட்டணியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்துப் பேசிய அவர், “கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் ஏற்கனவே நடந்துள்ளது. அனைவரும் கூடி ஆலோசித்துள்ளோம், ஆனால் எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. அடுத்தகட்ட கூட்டத்தை முதலமைச்சர் எப்போது கூட்டுவார் என்று அவரிடமே கேட்டுச் சொல்லுங்கள். அவர் கூப்பிடும்போது அடுத்தகட்ட முடிவுகள் தெரியவரும்” என்றார்.
’ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை மீண்டும் முறியடிப்போம்!
தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் குறித்துப் பேசிய திருமாவளவன், மத்திய அரசு மீண்டும் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ சட்டத்தைக் கொண்டு வர முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டினார்.
”ஏற்கனவே ‘டிலிமிட்டேஷன்’ (தொகுதி மறுசீரமைப்பு) என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட முயற்சிகளை திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் இணைந்து முறியடித்தோம். இந்த முறையும் நாடாளுமன்றத்தில் அதனை முறியடிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸிலிருந்து 20 எம்பிக்களை வெளியேற்றி அரசியல் சூதாட்டம் ஆடும் நிலையைத் தற்போதைய நாடாளுமன்றத்தில் பார்க்கிறோம்” என்று கவலை தெரிவித்தார்.
விசிக விருதுகள் வழங்கும் விழா
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் சான்றோர் விருதுகள் வழங்கும் விழா இன்று மாலை காமராஜர் அரங்கத்தில் நடைபெற உள்ளதாகத் திருமாவளவன் தெரிவித்தார்.
“கடந்த 2007-ஆம் ஆண்டில் இருந்து, சாதி ஒழிப்புக் களத்தில் போராடிக் கொண்டிருக்கிற தலித் அல்லாத ஆளுமைகளை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த விருதுகளை வழங்கி வருகிறோம். அந்த வகையில் இந்த ஆண்டு, பேராசிரியர் சொக்கலிங்கத்திற்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருதும், மற்ற சான்றோர்களுக்கு ‘செம்மொழி ஞாயிறு’, ‘பெரியார் ஒளி’ உள்ளிட்ட விருதுகளும் வழங்கப்பட உள்ளன. இந்த விழாவில் அனைவரும் பங்கேற்க வேண்டும்” என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
