Homeசெய்திகள்தமிழ்நாடுபேசாத பொம்மைகளைப் பேச வைத்த பெருமை திராவிட இயக்கத்திற்கு உண்டு: கி.வீரமணி முழக்கம்! 

பேசாத பொம்மைகளைப் பேச வைத்த பெருமை திராவிட இயக்கத்திற்கு உண்டு: கி.வீரமணி முழக்கம்! 

-

- Advertisement -

கலைமாமணி கலைவாணன்
“இன்று சமூகத்தில் பலர் பேசாத பொம்மைகளாகவே உள்ளனர். ஆனால், பல காலகட்டங்களில் அப்படிப்பட்ட பேசாத பொம்மைகளையும் பேச வைத்த பெருமை நம் திராவிட இயக்கத்திற்கு உண்டு” எனத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி புகழாரம் சூட்டியுள்ளார்.

​சென்னையை அடுத்த வேப்பேரி பெரியார் திடலில், அண்மையில் மறைந்த கலைமாமணி மு.கலைவாணனின் திருவுருவப் படத்திறப்பு விழா மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்பி கலந்துகொண்டு மறைந்த கலைஞரின் படத்தைத் திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினார்.

we-r-hiring

மதமும் கடவுளும் தான் ஏற்றத்தாழ்வுகளின் ஊற்றுக்கண்: கனிமொழி எம்பி

நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பேசியதாவது: “தற்போது பெரியாரின் கருத்துக்கள் குறித்துப் பல விவாதங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. தான் ஏன் கடவுள் நம்பிக்கையை எதிர்க்கிறேன் என்பதைப் பெரியாரே மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். தனக்கும் கடவுளுக்கும் தனிப்பட்ட முறையில் எந்த வாய்க்கால் வரப்புத் தகராறும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

​சமூகத்தில் மனிதர்களைப் பிறப்பின் அடிப்படையில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் எனப் பிரிக்கும் சாதி வெறியும், ஆண் – பெண் பாகுபாடும் எதனால் முன்வைக்கப்படுகிறது எனக் கேள்வி கேட்டால், அதற்கு விடையாக மதமும் கடவுளுமே காட்டப்படுகின்றன. நான் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் ஊற்றுக்கண்ணாக இருந்த அந்த மதத்தையும் கடவுளையும் தான் பெரியார் உடைத்தெறிந்தார். எதைக் கண்டும் அஞ்சாமல், எதையும் கேள்வி கேட்கத் தயங்காதவர்கள் மட்டும்தான் இந்தச் சமூகத்தில் உண்மையான மாற்றத்தைக் கொண்டு வர முடியும்.” இவ்வாறு அவர் பேசினார்.
கனிமொழி

​தேர்தல் வெற்றிகளைத் தாண்டியது திராவிடப் பாரம்பரியம்: கி.வீரமணி

​அதனைத் தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆற்றிய தலைமை உரையில், “மறைந்த பொம்மலாட்டக் கலைஞர் கலைவாணனின் தந்தை முத்தக்கூத்தன், பெரியார் மற்றும் கலைஞரைத் தன் வழிகாட்டிகளாகக் கொண்டவர். கலைத்துறையில் என்.எஸ்.கிருஷ்ணனைத் தனது குருவாக ஏற்றதால் தன் மகனுக்குக் ‘கலைவாணன்’ எனப் பெயரிட்டார். விவரம் தெரியாத சிலர் இன்று எதை வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், திராவிடப் பாரம்பரியத்தை எவராலும் அசைத்துவிட முடியாது. இது வெறும் தேர்தல் வெற்றி தோல்விகளைப் பொறுத்தது அல்ல. பெரியார் நடத்திய ‘குடியரசு’ எனும் குருகுலத்தில் வளர்ந்தவர்தான் நாட்டை வழிநடத்திய முத்தமிழறிஞர் கலைஞர்.

​இன்று நமது இனத்தையும், பண்பாட்டையும் சிதைக்கும் பேராபத்து முதன்மையாகக் கலைத்துறையில்தான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. கலை என்பது ஏதோ உயரத்தில் இருக்கும் சிலருக்கானது அல்ல, அது எளிய மக்களுக்குரியது. மக்களைச் சீர்திருத்தவும், பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்கவும் பொம்மலாட்டக் கலையைக் கையில் எடுத்தவர் கலைவாணன். இக்கலையின் மூலம் சமூக விழிப்புணர்வைத் தொடர நினைக்கும் இளைய தலைமுறைக்குத் திராவிடர் கழகம் என்றும் பக்கபலமாகத் துணை நிற்கும்.”

கொள்கைக்காக எம்.ஜி.ஆரை எதிர்த்தவர் முத்தக்கூத்தன்: ஆய்வாளர் திருநாவுக்கரசு 

​நிகழ்ச்சியில் உணர்ச்சிப் பெருக்குடன் உரையாற்றிய திராவிட இயக்க ஆய்வாளர் திருநாவுக்கரசு, “முத்தக்கூத்தன் ஆரம்பக் காலத்தில் எம்.ஜி.ஆர் நாடக மன்றத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தார். எம்.ஜி.ஆர் திமுகவிலிருந்து பிரிந்து சென்றபோது, தனக்குப் பதவியோ, பணமோ முக்கியமல்ல; கொள்கைதான் முக்கியம் என்று கூறி திமுகவிலேயே நிலைத்து நின்றவர் முத்தக்கூத்தன். அவரது வழியில் வந்த பிள்ளைகளும் இன்று கொள்கைப் பிடிப்புடன் இருப்பது திராவிட இயக்கத்திற்கு பெருமையளிக்கிறது” என்றார்.

​பெரியார் உலகத்திற்கு நிதி உதவி:

இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், ஓவியர் டிராஸ்ட்கி மருது உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மறைந்த கலைஞருக்குத் தங்களது நினைவஞ்சலியைச் செலுத்தினர். நிறைவாக, கலைவாணன் குழுவினரின் சிறப்பான பொம்மலாட்டக் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக, மறைந்த கலைவாணனின் குடும்பத்தினர் சார்பில் சிறுகனூரில் அமையவிருக்கும் ‘பெரியார் உலக’த் திட்டத்திற்காக ₹25,000/-க்கான நிதியுதவியை ஆசிரியர் கி.வீரமணியிடம் வழங்கினர்.

MUST READ