“ஆட்சி நிர்வாகத்தில் தலையிட கவர்னருக்கு எவ்வித அதிகாரமும் இல்லை” என்று கோவையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ காரசாரமாக தெரிவித்துள்ளார். மேலும், தி.மு.க மற்றும் பத்திரிகையாளர்களின் விமர்சனங்களுக்கும் அவர் அதிரடி பதிலடி கொடுத்துள்ளார். கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவின் முக்கியப் பேட்டி விவரம் வருமாறு:


கவர்னருக்கு அதிகாரம் இல்லை!
இப்போது அ.தி.மு.க மற்றும் தி.மு.க-வினர் கவர்னரைச் போய்ப் பார்க்கிறார்கள். ஆனால், கவர்னரோ ஆட்சி நிர்வாகத்தில் தேவையில்லாமல் தலையிடுகிறார். உண்மையில், நிர்வாகத்தில் தலையிட அவருக்கு எந்தவித அதிகாரமும் கிடையாது.
திமுக செய்தது குதிரை பேரமா, பெருச்சாளி பேரமா?
இப்போது ‘குதிரை பேரம்’ என்று பேசும் தி.மு.க-வினருக்கு நான் ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன். கடந்த 2006-ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சியின் போது, கம்பம் தொகுதியில் ம.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராமகிருஷ்ணனை பதவி விலகச் சொன்னார்கள்.
அதன்பின் அவரை தி.மு.க சார்பில் போட்டியிட வைத்து, அதே தொகுதியில் எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்க வைத்ததே… அது என்ன ‘பெருச்சாளி பேரமா’ அல்லது ‘குதிரை பேரமா’? ம.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் இரண்டு பேர் காணாமல் போய்விட்டார்கள் என்று சொல்கிறார்கள், அதற்கு நான் என்ன செய்ய முடியும்? முதல்வர் விஜய் நடத்தும் இந்த அரசுக்கு, எதிர்தரப்பில் இருந்து வரும் கணைகளைத் தடுக்கும் பலத்த ‘கவசமாக’ ம.தி.மு.க என்றும் இருக்கும்.
செய்தியாளர்களிடம் ஆவேசப்பட்டது ஏன்? – வைகோ விளக்கம்
கடந்த சில நாட்களாக பத்திரிகையாளர்களிடம் ஆவேசமாக நடந்துகொண்டது குறித்த கேள்விக்கு வைகோ விரிவான விளக்கமளித்தார்:
தினமலர் தாக்கப்பகட்ட போது குரல் கொடுத்தேன்:
“மதுரையில் பத்திரிகை அலுவலகம் சூறையாடப்பட்டு 3 பேர் உயிரிழந்த போதும், மதுரை ‘தினமலர்’ அலுவலகம் தாக்கப்பட்ட போதும் எந்த அரசியல் கட்சியும் போராட முன்வரவில்லை. ஆனால், நான் நள்ளிரவிலேயே அந்த அலுவலகத்திற்குச் சென்று, மறுநாளே ஆயிரம் பேரைத் திரட்டி கண்டன ஊர்வலம் நடத்தினேன். சென்னையில் அதே நாளிதழ் இயந்திரங்களை உடைத்தபோது கூட மற்ற பத்திரிகையாளர்கள் அந்த கட்சியைக் கண்டிக்கவில்லை.
திட்டமிட்டு கேட்கப்படும் கேள்விகள்:
கடந்த ஒரு வாரத்திற்குள் ஒரு குறிப்பிட்ட பத்திரிகை என்னை புண்படுத்தும் நோக்கில் கேள்வி கேட்டபோதும், நான் பொறுமையாகவே பதில் சொன்னேன். ஆனால், திரும்பத் திரும்ப அதேபோல் கேட்டதால் தான், ‘உங்கள் பத்திரிகையால் ஏவி விடப்பட்டு கேள்வி கேட்கிறீர்கள்’ என்று கூறினேன். இதற்கு பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்ததும், நான் அன்றிரவே என் வருத்தத்தைத் தெரிவித்துவிட்டேன்.
யாராக இருந்தாலும் பொறுமை இழப்பார்கள்:
நான் ஏதோ ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்துவிட்டதாகவும், சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கி குவித்துவிட்டதாகவும் சில பத்திரிகைகள் அவதூறு பரப்புகின்றன. இப்படிப்பட்டவர்கள் முன்னால் நின்று கேள்வி கேட்கும்போது, யாராக இருந்தாலும் பொறுமை காக்க முடியாது” என்று வைகோ தெரிவித்தார்.
