Homeசெய்திகள்அரசியல்"விஜய் ஒன்றும் அவதார புருஷரோ, கடவுளோ அல்ல!" - அதிமுக எம்.எல்.ஏ-க்களை ராஜினாமா செய்ய வைப்பதாக...

“விஜய் ஒன்றும் அவதார புருஷரோ, கடவுளோ அல்ல!” – அதிமுக எம்.எல்.ஏ-க்களை ராஜினாமா செய்ய வைப்பதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு!

-

- Advertisement -

“தமிழகத்தைக் காக்க வந்த கடவுளோ, அவதார புருஷரோ விஜய் கிடையாது. தற்காலிகமாகப் பெற்றுள்ள அதிகாரத்தால் தலைகால் புரியாமல் ஆடும் ஆட்டத்திற்குத் தமிழக மக்கள் விரைவில் முடிவுரை எழுதுவார்கள்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை மற்றும் பேட்டியின் விவரங்கள் பின்வருமாறு:
ஆர்.பி. உதயகுமார்

டெல்டா வறட்சி மற்றும் விவசாயிகள் துயரம் புறக்கணிப்பு
​இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் காவிரியிலிருந்து ஜூலை மாதத்திற்குத் திறந்து விட வேண்டிய 32 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகா அரசு திறந்து விடவில்லை. மேலும், மேகதாது அணை கட்டுவதற்கான ஆயத்தப் பணிகளையும் கர்நாடகா தொடங்கியுள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்கள் கடுமையான வறட்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன, விவசாயிகள் ஆழ்ந்த கவலையில் உள்ளனர்.

we-r-hiring

அதேபோல், முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பாகப் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள கேரளா அரசு தமிழக அரசுடன் முரண்பட்டு நிற்கிறது. இதனால் தென் மாவட்ட விவசாயிகளும் துயரத்தில் உள்ளனர். இவற்றுக்கெல்லாம் தீர்வு காண வேண்டிய கடமை தற்போதைய அரசுக்கு உள்ளது.

சட்டம் ஒழுங்கு சீர்குலைவு
​கடந்த இரண்டு மாதங்களாகத் தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அத்துமீறிப் போய்க்கொண்டிருக்கின்றன. சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய த.வெ.க அரசு, இதனை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. அரசு நிர்வாகத்தில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, அதிமுகவை முடக்கவே திட்டமிடுகின்றனர்.

அதிமுக எம்.எல்.ஏ-க்களை தூக்க ‘குதிரை பேரம்’ ரகசிய திட்டம்?
​கடந்த 52 ஆண்டுகளாக மக்களுக்காக உழைத்து வரும் பேரியக்கமான அதிமுகவையும், அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் மக்கள் பணியில் இருந்து தனிமைப்படுத்த ஒரு ரகசிய திட்டம் அரங்கேறி வருகிறது.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி ஆசை காட்டி, அதிமுக குடும்பத்தில் பிளவை ஏற்படுத்தப் பார்க்கிறார்கள். அரசியல் மரபுகளை மீறி, எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடியாரைச் சந்திக்காமல், அதிமுக எம்.எல்.ஏ-க்களை மட்டும் அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று விஜய் சந்தித்தது அரசியல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ‘ஆடு பகை குட்டி உறவு’ என்ற பழமொழிதான் இதற்குப் பொருந்தும்.
​அதிமுகவினர் எடப்பாடியாரோடு உறுதியாக நின்றதால், அதிர்ந்துபோன விஜய், அதிரடியாக குதிரை பேரத்தில் ஈடுபட்டு இதுவரை 6 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களைத் தூக்கி, ராஜினாமா செய்ய வைத்துள்ளார். இன்னும் 12 பேரை ராஜினாமா செய்ய வைக்க ஆட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்று செய்திகள் வருகின்றன. தேர்தல் நேரத்தில் அதிமுகவை ‘அல்லு சில்லுகள்’ என்று ஆணவத்தின் உச்சியில் விஜய் விமர்சித்ததை மக்கள் மறக்கவில்லை.

எடப்பாடியார் மீது ஏன் இவ்வளவு வன்மம்?
​எடப்பாடி பழனிசாமியாருக்கும் விஜய்க்கும் இடையே எந்த மாமன்-மச்சான் சண்டையோ அல்லது வாய்க்கால் வரப்பு தகராறோ கிடையாது. பின் ஏன் இந்த வன்மம்?
​ஒரு எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து, எந்தவொரு அரசியல் பின்புலமோ அல்லது சினிமா வசீகரமோ இல்லாமல், தனது அர்ப்பணிப்பாலும் அயராத உழைப்பாலும் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக எடப்பாடியார் உயர்ந்துள்ளார். பல்வேறு சூழ்ச்சிகள் மற்றும் துரோகங்களைத் தாண்டி அதிமுகவை அவர் வழிநடத்தி வருகிறார். அதிமுகவைத் தனிமைப்படுத்திவிட்டால், த.வெ.க-வை தேசிய அளவில் வளர்த்துவிடலாம் என எடப்பாடியாரைத் தொடர்ந்து சீண்டிக்கொண்டே இருக்கிறார்கள்.

​காலம் மாறும் – மக்கள் தீர்ப்பளிப்பார்கள்!
​காலம் இப்படியே போய்விடாது. காலம் மாறும்போது அரசியலில் விஜய் கடுமையான பின்னடைவுகளைச் சந்திக்கும் தீர்ப்புகள் வரும். விஜய் ஒன்றும் அவதார புருஷனும் அல்ல, தமிழ்நாட்டைக் காக்க வந்த கடவுளும் அல்ல. காலம் தந்த தீர்ப்பில் அவருக்கு முதலமைச்சர் அரியாசனம் கிடைத்திருந்தாலும், தலைகால் புரியாமல் ஆடுகிற ஆட்டம் எத்தனை நாளைக்கு நீடிக்கும் என்று பார்ப்போம். மக்கள் இதற்குச் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று ஆர்.பி. உதயகுமார் சாடியுள்ளார்.

MUST READ