ஆட்சியைத் தலைகீழாகக் கவிழ்க்கச் சதித் திட்டம் தீட்டியதாகவும், ₹35 கோடி குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகவும் தொடரப்பட்ட வழக்கில், தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகிய இருவருக்கும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.


இவ்வழக்கின் இறுதி விசாரணையின் போது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, “குதிரை பேரம் பேசப்பட்டதாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடல்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. கரூர் இடைத்தேர்தலில் அவர் பணியாற்றுவதைத் தடுப்பதற்காக, வெறும் யூகத்தின் அடிப்படையில் இந்த அரசியல் உள்நோக்கம் கொண்ட வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என வாதிட்டார்.
அதேபோல், அசோக்குமார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குமரேசன், “சட்டமன்றத்தில் ஏற்கனவே 108 உறுப்பினர்களுடன் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டு அரசு நிலையாக உள்ள சூழலில், சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தின் மூலம் ஆட்சியை கவிழ்க்க முடியும் என்பது கற்பனையான வாதம்” என்று குறிப்பிட்டார்.
இதற்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்த காவல்துறை தரப்பு மூத்த வழக்கறிஞர் ஜான் சத்தியன், “விசாரணை ஆரம்பக் கட்டத்தில் உள்ளது. குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் சென்னை ஈசிஆர் மற்றும் கிண்டி பகுதிகளில் ஒன்று கூடியதற்கான சிசிடிவி காட்சிகள், தொலைபேசி ஆதாரங்கள் மற்றும் ஹவாலா பணப் பரிமாற்றத்திற்கான வலுவான சான்றுகள் உள்ளன. எனவே, இவர்களைக் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும்” என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி இளந்திரையன், இருவருக்கும் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதேநேரம், “இருவரும் தினமும் காலை மற்றும் மாலை ஆகிய இருவேளையும் இவ்வழக்கின் காவல்துறை விசாரணை அதிகாரி முன்பாக நேரில் ஆஜராக வேண்டும்” என்ற கடுமையான நிபந்தனையையும் நீதிபதி விதித்துள்ளார்.
