சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகரை (TTE) தாக்கியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், பெண் வழக்கறிஞர் மோகனாவுக்குச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி அதிரடி உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணி ஒருவருக்கும், டிக்கெட் பரிசோதகருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கிக்கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற நீதிமன்ற வழக்கின் முழு விபரம் வருமாறு, டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்ததாக ஏற்பட்ட தகராறில், டிக்கெட் பரிசோதகரைத் தாக்கியதாக வழக்கறிஞர் மோகனா மீது எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதே வேளையில், வழக்கறிஞர் மோகனா அளித்த எதிர் புகாரின் அடிப்படையில், டிக்கெட் பரிசோதகர் மீது எழும்பூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்தச் சூழலில், கைது நடவடிக்கையிலிருந்து தப்பிப்பதற்காக வழக்கறிஞர் மோகனா, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.

பெண் வழக்கறிஞரின் மனுவில் உள்ள விவரம்
வழக்கறிஞர் மோகனா தனது மனுவில் குறிப்பிட்டிருந்ததாவது, ”கடந்த ஜூலை 04-ஆம் தேதி வழக்கு ஒன்றின் நிமித்தமாக நீதிமன்றத்திற்குச் சென்றுவிட்டு, பின்னர் சொந்த ஊருக்குப் பேருந்து மூலம் செல்வதற்காக எழும்பூர் ரயில் நிலைய நடைபாதையில் காத்திருந்தேன்.அப்போது அங்கு வந்த டிக்கெட் பரிசோதகர், நான் டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்து வந்ததாகக் கூறி தேவையின்றி என்னிடம் தகராறில் ஈடுபட்டார். நான் பேருந்து நிலையத்திற்குச் செல்லவே இங்குக் காத்திருக்கிறேன் என்றும், நான் ஒரு வழக்கறிஞர் என்றும் கூறியும் அவர் அதைக் கேட்க மறுத்துவிட்டார்.மேலும், என்னை வலுக்கட்டாயமாகத் தனது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, எனது செல்போனைப் பறித்ததோடு என் மீது தாக்குதலும் நடத்தினார். அவரிடமிருந்து என்னைத் தற்காத்துக் கொள்ளவே நான் முயன்றேன். தற்போது இருதரப்பிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்.”

நீதிமன்ற விசாரணை மற்றும் உத்தரவு
இந்த முன்ஜாமீன் மனு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் மோகனா தரப்பில் பிரபல வழக்கறிஞர் பால் கனகராஜ் ஆஜராகி வாதாடினார். அவர் தனது வாதத்தில், “இந்தச் சம்பவத்தில் டிக்கெட் பரிசோதகர் தான் முதலில் பெண் வழக்கறிஞர் மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இதில் வழக்கறிஞர் மீது எந்தத் தவறும் இல்லை. நீதிமன்றம் விதிக்கும் எந்தவொரு நிபந்தனைகளையும் ஏற்க மனுதாரர் தயாராக இருப்பதால், அவருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்” என வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் விரிவாகக் கேட்டறிந்த நீதிபதி கார்த்திகேயன், வழக்கறிஞர் மோகனாவுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இந்தத் தீர்ப்பு எழும்பூர் ரயில் நிலைய மோதல் விவகாரத்தில் முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்குத் தண்ணீர் திறப்பு: சென்னை மக்களுக்கு நிம்மதிப் பெருமூச்சு!
