டாஸ்மாக் ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நியாயமான ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலையில் டாஸ்மாக் ஊழியர்கள் தங்களது குடும்பத்தினருடன் மாவட்ட பொது மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிரடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குடும்பத்துடன் திரண்ட ஊழியர்கள்:
தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர் நலச்சங்கம் சார்பில் இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதன்பேரில், திருவண்ணாமலை புறவழிச்சாலையில் (பைபாஸ் சாலை) அமைந்துள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பாக 200-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் பணியாளர்கள் தங்களது குடும்பத்தினர், குழந்தைகள் மற்றும் மனைவிகளுடன் திரண்டனர்.

அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கம்:
அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், தங்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான பணி வரன்முறைப்படுத்துதல் மற்றும் உழைப்பிற்கேற்ற நியாயமான ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்கக் கோரி தமிழக அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பினர். பல ஆண்டுகளாகத் தற்காலிகப் பணியாளர்களாகவே நீடிப்பதால் தங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாகப் போராட்டக்காரர்கள் வேதனை தெரிவித்தனர்.

டாஸ்மாக் ஊழியர்கள் தங்களது குடும்பத்தினருடன் திரண்டு மாவட்ட மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவத்தால், திருவண்ணாமலை புறவழிச்சாலை பகுதியில் இன்று சில மணி நேரம் பெரும் பரபரப்பு நிலவியது. பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
