தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், தனது பதவிக்காலத்தில் முதல்முறையாக கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூர் பிரச்சாரக் கூட்டத்தில் நிகழ்ந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காகவும், அவர்களுக்கு அரசு வேலைக்கான ஆணைகளை வழங்குவதற்காகவும் முதல்வர் இந்த வருகையை மேற்கொண்டுள்ளார்.
திருச்சியிலிருந்து சாலை மார்க்கமாக கரூர் வந்தடைந்த முதலமைச்சர் விஜயை, தவெகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். விழா அரங்கிற்கு அருகே வந்தடைந்த முதல்வர், அங்கு காத்திருந்த கரூர் மாவட்டச் செயலாளர் வி.பி. மதியழகனைப் பார்த்ததும், சுற்றியிருந்தவர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் மதியழகனின் தோள் மீது கைகளைப் போட்டு தனது அன்பையும், தோழமையையும் வெளிப்படுத்தினார். முதல்வர் அரங்கிற்குள் நுழைந்தபோது, கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் அவருக்குக் கைக்குலுக்கி சிறப்பான வரவேற்பு அளித்தனர். முதல்வர் விஜயுடன் இருந்த அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
கடந்தாண்டு நடைபெற்ற துயரச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட 41 குடும்பங்களில், தகுதியுள்ள 32 குடும்பத்தினருக்கு அரசுப் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் இந்த விழாவில் வழங்குகிறார். இந்த நிகழ்வு, துயரத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு, கரூர் வெண்ணெய்மலை பகுதியில் உள்ள அட்லஸ் கலையரங்கம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் ஏடிஜிபி அன்பு தலைமையிலான காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட இந்த நிகழ்வு, தவெக ஆதரவாளர்கள் மற்றும் கரூர் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

