“ஊழலை ஒழிப்பதாக மைக் முன்பு அனைவரும் பேசுகின்றனர். ஆனால், நடைமுறையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை” என்று சென்னை உயர் நீதிமன்றம் தங்களது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சராக எஸ்.பி.வேலுமணி பதவி வகித்தபோது, சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் ஒப்பந்தங்கள் வழங்கியதில் சுமார் ₹98.25 கோடி அளவிற்கு முறைகேடுகள் நடந்ததாகக் கூறி ‘அறப்போர் இயக்கம்’ சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
தேர்தலே முடிந்துவிட்டது: நீதிமன்றம் அதிருப்தி
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், காலதாமதம் குறித்து கடுமையான கருத்துக்களை முன்வைத்தார். “குற்றம் நடந்து ஐந்து ஆண்டுகள் முடிவடைந்துவிட்டன. அதற்குள் அடுத்த சட்டமன்றத் தேர்தலும் முடிந்துவிட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை மக்கள் மீண்டும் தேர்ந்தெடுத்தும் (எம்.எல்.ஏ-வாக) விட்டனர்” என்று சுட்டிக்காட்டினார்.மேலும், அரசியல் மேடைகளிலும் மைக் முன்பும் ஊழலை ஒழிப்பதாகப் பேசுபவர்கள், அதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதில் காட்டுவதில்லை என நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.

மத்திய அரசிடம் நிலுவையில் உள்ள அனுமதி கடிதம்
விசாரணையின் போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகேயன் ஆகியோருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து நடவடிக்கை எடுப்பதற்கு அனுமதி கோரி மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் கடிதம் தற்போது மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளது” என்று விளக்கம் அளிக்கப்பட்டது. ரூ.98 கோடி மாநகராட்சி ஒப்பந்த முறைகேடு வழக்கில், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு எதிரான அனுமதி இன்னும் கிடைக்கப் பெறாமல் இருப்பதும், வழக்கு ஐந்து ஆண்டுகளைக் கடந்தும் இழுபறியாக இருப்பதும் நீதிமன்றத்தின் இந்த கடுமையான விமர்சனத்திற்குக் காரணமாக அமைந்துள்ளது.
