மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே அதிகாலையில் அரசு பேருந்தும், தனியார் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில், ஒரு பெண் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 42 பேர் பலத்த காயமடைந்தனர்.


விபத்து நடந்தது எப்படி?
சென்னையிலிருந்து கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் நோக்கி பயணிகளுடன் தனியார் ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள வஞ்சி நகரம் நான்கு வழிச்சாலையில் அதிகாலை நேரத்தில் சென்றபோது, ஆம்னி பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.
கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து, நடுவே இருந்த தடுப்புச் சுவரைத் தாண்டி எதிர்ச் சாலைக்குச் சென்றது. அப்போது மதுரையில் இருந்து திருச்சி நோக்கி பயணிகளுடன் வந்து கொண்டிருந்த அரசு பேருந்தின் மீது பயங்கர வேகத்தில் நேருக்கு நேர் மோதியது.

பயணிகள் நிழற்குடை தரைமட்டம்
அரசு பேருந்து மீது மோதிய வேகத்தில், ஆம்னி பேருந்து மீண்டும் தனது இடது பக்க சாலைக்குத் திரும்பி, அங்கிருந்த பயணிகள் நிழற்குடை (Bus Shelter) மீது பலமாக மோதி நின்றது. இந்த மோதலின் தாக்கத்தால் பயணிகள் நிழற்குடை முற்றிலும் இடிந்து தரைமட்டமானது.
5 பேர் பலி; 42 பேர் மருத்துவமனையில் அனுமதி
இந்த கோர விபத்தில் இரு பேருந்துகளிலும் பயணம் செய்த 4 ஆண்கள் மற்றும் 1 பெண் என மொத்தம் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இரு பேருந்துகளையும் சேர்ந்த 42 பயணிகள் படுகாயமடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உயரதிகாரிகள் நேரில் ஆய்வு
விபத்து நடந்த இடத்தை மதுரை சரக டி.ஐ.ஜி அபிநவ்குமார், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) தேவநாதன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், மீட்புப் பணிகளை விரைவுபடுத்துவது குறித்தும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர், நெடுஞ்சாலைத் துறை ரோந்துப் படையினர் இணைந்து விபத்துக்குள்ளான வாகனங்களையும், இடிபாடுகளையும் அகற்றி சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதிகாலையில் நிகழ்ந்த இந்த பயங்கர விபத்தால் மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சில மணி நேரம் பெரும் பரபரப்பும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. விபத்து குறித்து கொட்டாம்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
