ஆன்மீகம் மற்றும் சுற்றுலாத் தலமான ராமேஸ்வரத்திற்குத் தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். அவ்வாறு வரும் பயணிகள் தனுஷ்கோடி, அரிச்சல்முனை மற்றும் கோதண்டராமர் கோயில் ஆகிய கடலோரப் பகுதிகளுக்குச் சென்று இயற்கை எழிலை ரசிப்பதோடு, புகைப்படங்கள் மற்றும் செல்ஃபிக்களையும் எடுத்து மகிழ்கின்றனர்.
அரிச்சல்முனையில் நேர்ந்த திடுக்கிடும் சம்பவம்
இந்நிலையில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் சிலர் தங்கள் குழந்தைகளுடன் தனுஷ்கோடி பகுதிக்குச் சுற்றுலா வந்துள்ளனர். தொடர்ந்து, நிலப்பரப்பின் கடைகோடி எல்லையான அரிச்சல்முனைப் பகுதியில் அவர்கள் கடலில் இறங்கி விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக வந்த ராட்சதக் கடல் அலையின் சீற்றத்தில் சிக்கி, அக்குடும்பத்தைச் சேர்ந்த சிறு குழந்தை ஒன்று கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோரும் உறவினர்களும் கூச்சலிட்டனர்.
சாதுரியமாகச் செயல்பட்டு உயிரைக் காப்பாற்றிய மீனவர்கள்
அந்நேரத்தில், கடற்கரை ஓரத்தில் சங்கு வியாபாரம் செய்து கொண்டிருந்த உள்ளூர் மீனவர்கள், குழந்தை அலையில் சிக்கியதை உடனடியாகக் கவனித்தனர். கணப்பொழுதும் தாமதிக்காமல், தங்களின் உயிரைப் பொருட்படுத்தாமல் அலைகள் சீறிப்பாயும் கடலுக்குள் இறங்கிச் சாதுரியமாகச் செயல்பட்டனர். அலையில் அடித்துச் செல்லப்பட்ட குழந்தையை பத்திரமாக மீட்டு கரை சேர்த்தனர். மீனவர்களின் இந்த உடனடி சுதாரிப்பால் மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு, குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டது.
மீனவர்கள் தங்களின் உயிரைப் பணயம் வைத்து அலைகளுக்கு இடையே போராடி குழந்தையைக் காப்பாற்றும் நெகிழ்ச்சியானக் காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. ஆபத்தான சூழலிலும் துணிச்சலாகச் செயல்பட்டு குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய அந்த மீனவர்களுக்குச் சமூக வலைதளங்களில் பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.
