கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே, கையும் களவுமாக நகைத் திருடனைப் பிடித்துக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தும், ஓராண்டாக நகைகளை மீட்டுத் தராமல் அலைக்கழிப்பதாகப் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் மல்கக் குற்றம் சாட்டியுள்ளார். காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து நகைகளை மீட்டுத் தராவிட்டால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என அவர் விடுத்துள்ள எச்சரிக்கை அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உழைத்துச் சேர்த்த 26 பவுன் நகை மாயம் கற்காடு பகுதியைச் சேர்ந்தவர் சைலஜா (49). இவரது கணவர் நீலகண்டன் கடுமையான உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் குடும்பத்தைக் காப்பாற்ற சைலஜா தனது வீட்டிலேயே வடைகள் சுட்டு, அதனை ஊர் ஊராகச் சென்று விற்றுத் தன் வாழ்வாதாரத்தைச் சமாளித்து வருகிறார்.

தனது திருமணத்தின் போது பெற்றோர் சீதனமாகக் கொடுத்த நகைகள் மற்றும் சிறுகச் சிறுகச் சேமித்து வாங்கிய 26 பவுன் தங்க நகைகளையும், பணத்தையும் தனது வீட்டின் பீரோவில் அவர் பத்திரமாக வைத்திருந்தார். கடந்த 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், உறவினர் வீட்டு விசேஷத்திற்காகப் பீரோவைத் திறந்து பார்த்தபோது, அதில் இருந்த 26 பவுன் நகைகளும் மாயமாகியிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
கையும் களவுமாகப் பிடித்துக் கொடுத்தும் அலட்சியம் நகைகள் காணாமல் போனது குறித்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தபோது, சைலஜா வீட்டில் இல்லாத நேரத்தில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த பத்மா (42) என்பவர் அடிக்கடி வந்து சென்றது தெரியவந்தது. சந்தேகத்தின் பேரில் பத்மாவிடம் விசாரித்தபோது, அவரே நகைகளைத் திருடியதை ஒப்புக் கொண்டார். இதனைத் தொடர்ந்து, கடந்த 06.08.2025 அன்று பத்மாவைப் பிடித்துச் சுசீந்திரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து சைலஜா புகார் அளித்தார். காவல்துறையினரும் வழக்குப்பதிவு செய்தனர்.
காவல்துறையின் மர்ம மௌனம்: தப்பியோடிய குற்றவாளி காவல் நிலையத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது நகைகளைத் திருப்பிக் கொடுத்துவிடுவதாகப் பத்மா உறுதியளித்துள்ளார். ஆனால், “குற்றவாளி தப்பிவிட வாய்ப்புள்ளது, உடனடியாகக் கைது செய்யுங்கள்” என்று சைலஜா சுசீந்திரம் காவல் துறையினரிடம் மன்றாடியும், காவல்துறையினர் பத்மாவைக் கைது செய்யாமல் விட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனைப் பயன்படுத்திக் கொண்ட பத்மா, அங்கிருந்து தப்பித்துத் தலைமறைவாகிவிட்டார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதறல் கடந்த ஓராண்டிற்கும் மேலாகத் தொடர் அலைக்கழிப்பால் மனவுளைச்சலுக்கு ஆளாகியுள்ள சைலஜா இது குறித்து வேதனையுடன் தெரிவிக்கையில் “காவல் நிலையத்தில் கையும் களவுமாகப் பிடித்துக் கொடுத்தும் குற்றவாளியை ஏன் தப்ப விட்டார்கள் என்று தெரியவில்லை. கடந்த ஓராண்டாக ‘விசாரணை நடக்கிறது’ என்று கூறி என்னை அலைக்கழிக்கிறார்களே தவிர, நகைகளை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தலைமறைவான பத்மாவைப் பிடிக்கவும் ஆர்வம் காட்டவில்லை.
எங்களது வாழ்வாதாரமே முற்றிலும் முடங்கிவிட்டது. மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) என அனைவரிடமும் மனு அளித்தும் நீதி கிடைக்கவில்லை. காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து எனது நகைகளை மீட்டுத் தராவிட்டால், கடிதம் எழுதி வைத்துவிட்டு குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.”
பொதுமக்கள் கொந்தளிப்பு சமீபத்தில் வெளியான திரைப் படத்தின் கதையை மிஞ்சும் வகையில், திருடனைப் பிடித்துக் கொடுத்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பையும், காவல்துறையின் செயல்பாடுகள் மீதான சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.
உடனடியாக மாவட்ட நிர்வாகமும், உயர் காவல் அதிகாரிகளக் தலையிட்டு ஏழைப் பெண்ணின் நகைகளை மீட்டுத் தர வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
