தமிழக சட்டப்பேரவையின் வரலாற்றுச் சிறப்புமிக்க பேரவைத் தலைவர் (சபாநாயகர்) இருக்கையில் அமர்ந்து அவையை வழிநடத்தியதன் மூலம், புதிய சாதனையையும் வரலாற்றையும் படைத்துள்ளார் திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாற்றுத் தலைவருமான (Panel Speaker) வி. சத்யபாமா.
சட்டப்பேரவையின் வழக்கமான நடவடிக்கைகளின் போது சபாநாயகர் தற்காலிகமாக இருக்கையில் இல்லாத சூழலில், அவையை வழிநடத்தும் மாற்றுத் தலைவர்கள் பட்டியலின் அடிப்படையில் தவெக எம்.எல்.ஏ சத்யபாமா பேரவைத் தலைவர் ஆசனத்தில் அமர்ந்து பேரவை நிகழ்வுகளைத் திறம்பட வழிநடத்தினார்.

லேடி வெலிங்டன் ஆசனமும் வரலாற்றுச் சிறப்பும்1922-ஆம் ஆண்டு லார்ட் மற்றும் லேடி வெலிங்டன் தம்பதியரால் வழங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த பேரவைத் தலைவர் நாற்காலியில் ஒரு பெண்மணி அமர்ந்து அவையை வழிநடத்தியது பேரவையில் பெருமித உணர்வை ஏற்படுத்தியது.
முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட பல மூத்த சட்டமன்ற உறுப்பினர்களும் இதைக் குறிப்பிட்டுப் பேசுகையில், “வரலாற்றுப் பின்னணி கொண்ட இந்த ஆசனத்தில் ஒரு பெண்மணி சபாநாயகராக / மாற்றுத் தலைவராக அமர்ந்து அவையை வழிநடத்த வேண்டும் என்பது நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்தது. அதை இன்று சத்யபாமா நிறைவேற்றியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது” எனக் கூறித் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
சட்டமன்ற வரலாற்றில் இந்த நிகழ்வு ஒரு முக்கியப் மைல்கல்லாகப் பார்க்கப்படுவதோடு, தவெக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் எம்.எல்.ஏ சத்யபாமாவுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
சட்டப்பேரவை மாற்றுத் தலைவராக தவெக எம்.எல்.ஏ சத்யபாமா: பேரவையில் வாழ்த்து தெரிவித்த தங்கம் தென்னரசு!
