தளவாய் சுந்தரம் அளித்த ஆதாரங்களை ஓடிவந்து வாங்கி சபாநாயகரிடம் ஒப்படைத்த அமைச்சர் ராஜ்மோகன் – பேரவையில் பரபரப்பு
தமிழக சட்டப்பேரவையில் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக ஆளுங்கட்சியான திமுகவுக்கும் எதிர்க்கட்சியான அதிமுகவுக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்ற நிலையில், திமுக மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் உள்ளதாகக் கூறி சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரம் ஆதாரங்களை நீட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பேரவையில் காரசார விவாதம்
சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது குறித்து விவாதம் எழுந்தது. அப்போது பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம், கச்சத்தீவு இலங்கைக்குக் கைமாறிய விவகாரத்தில் அப்போதைய திமுக அரசின் பங்களிப்பு மற்றும் நிலைப்பாடு குறித்துக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
திமுக தரப்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், “எங்களிடம் இதற்கான முழு ஆதாரங்களும் உள்ளன” எனக் கூறி தளவாய் சுந்தரம் தனது கையிலிருந்த ஆவணங்களை பேரவையில் உயர்த்திக் காட்டினார்.
ஓடிவந்து வாங்கிய அமைச்சர் ராஜ்மோகன்
“ஆதாரம் இருக்கு… ஆதாரம் இருக்கு…” என்று தளவாய் சுந்தரம் பேரவையில் ஆதாரங்களை நீட்டியதை அடுத்து, அவையில் இருந்த அமைச்சர் ராஜ்மோகன் உடனடியாகப் பதற்றத்துடன் ஓடிவந்து, தளவாய் சுந்தரத்தின் கையிலிருந்த ஆவணங்களைப் பெற்றுக் கொண்டு சபாநாயகர் இருக்கையை நோக்கிச் சென்று அவரிடம் ஒப்படைத்தார்.
கச்சத்தீவு விவகாரம் குறித்துப் பேரவையில் இருதரப்பிற்கும் இடையே விவாதம் முற்றிய நிலையில், அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரம் ஆவணங்களைக் காட்டியதும், அதை அமைச்சர் ராஜ்மோகன் வாங்கிச் சென்று சபாநாயகரிடம் வழங்கியதும் சட்டப்பேரவை வளாகத்தில் பெரும் பரபரப்பையும் சுவாரசியத்தையும் ஏற்படுத்தியது.
