தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ‘சென்னை 600 028’ படத்தின் 3-ம் பாகம் உருவாக உள்ளது. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.


மீண்டும் வருகிறது ‘சென்னை 600 028’
வெங்கட் பிரபு இயக்குநராக அறிமுகமான திரைப்படம் ‘சென்னை 600 028’. கடந்த 2007-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் கிரிக்கெட் விளையாட்டு மற்றும் நண்பர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நகைச்சுவை கலந்த திரைப்படமாக இருந்தது.
சிவா, ஜெய், நிதின் சத்யா, அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா மற்றும் பிரேம்ஜி அமரன் இசையமைத்திருந்தனர்.
2016-ல் வெளியான இரண்டாம் பாகம்
முதல் பாகத்தின் வரவேற்பைத் தொடர்ந்து, ‘சென்னை 600 028 II’ திரைப்படத்தை வெங்கட் பிரபு 2016-ம் ஆண்டு இயக்கினார். அந்தப் படமும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
இதையடுத்து மூன்றாம் பாகம் எப்போது உருவாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நீண்ட காலமாக இருந்து வந்த நிலையில், தற்போது அதற்கான பணிகள் வேகமெடுத்துள்ளன.
அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடக்கம்
‘சென்னை 600 028 III’ படத்திற்காக சென்னையில் பிரத்யேக அரங்கம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் படப்பிடிப்பை தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
முதல் கட்டமாக சென்னையில் சுமார் 10 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. அதன்பிறகு இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பாங்காக்கில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மீண்டும் வெங்கட் பிரபு பாணி கலகலப்பு!
முதல் இரண்டு பாகங்களைப் போலவே மூன்றாம் பாகமும் நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளித்து உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் வெங்கட் பிரபுவின் 20 ஆண்டுகால திரைப்பயணத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக ‘சென்னை 600 028’ திரைப்படங்கள் இருந்து வரும் நிலையில், மூன்றாம் பாகம் குறித்த அறிவிப்பு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாரிஸ் பேஷன் வீக்கில் ராயல் லுக்கில் கலக்கிய ஐஸ்வர்யா ராய்.. செலின் டியானுடன் உற்சாக நடனம்!
