சென்னையில் உள்ள 17 லட்சம் கட்டடங்களில் சுமார் 6 லட்சம் கட்டடங்களில் மட்டுமே மழைநீர் சேகரிப்பு அமைப்பு இருப்பது தெரியவந்துள்ளது. நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் நோக்கில் மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் ஆதாரக் கட்டமைப்புகளைப் புனரமைக்கும் நடவடிக்கைகள் இயக்கமாக முன்னெடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன்தெரிவித்துள்ளார்.
சென்னை ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள அம்மா மாளிகை கூட்டரங்கில், நிலத்தடி நீர் பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் ஆதாரக் கட்டமைப்புகளைப் புனரமைத்தல் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், குடியிருப்பு நலச் சங்கத்தினர், தன்னார்வலர்கள், கட்டட வரைபட உரிமம் பெற்ற பொறியாளர்கள், கட்டுமானப் பொறியாளர்கள், மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் வாரியப் பொறியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
17 லட்சம் கட்டடங்களில் 6 லட்சத்தில் மட்டுமே மழைநீர் சேகரிப்பு
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் சமீரன் கூறியதாவது:
சென்னையில் மொத்தம் 17 லட்சம் கட்டடங்கள் உள்ளன. அவற்றில் 6 லட்சம் கட்டடங்களில் மட்டுமே மழைநீர் சேகரிப்பு அமைப்பு இருப்பது தெரியவந்துள்ளது. சென்னை மாநகரின் குடிநீர் தேவை நாளொன்றுக்கு 1,246 மில்லியன் லிட்டராக (எம்.எல்.டி.) உள்ளது. இதில் 6 சதவீதம் மட்டுமே நிலத்தடி நீர் மூலம் பெறப்படுகிறது. கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இந்த அளவு 5.6 சதவீதமாகக் குறைந்துள்ளது.
எனவே, நிலத்தடி நீரின் அளவை அதிகரிக்கும் நோக்கில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நீர்த்தேக்கங்களில் 41 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு
சென்னையைச் சுற்றியுள்ள நீர்த்தேக்கங்களில் தற்போதைய காலகட்டத்தில் 60 சதவீதம் அளவுக்கு நீர் இருப்பு இருக்க வேண்டும். ஆனால், தற்போது 41 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு, நிலத்தடி நீரை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளைத் தனித்தனியாக மேற்கொள்ளாமல், பொதுமக்கள், குடியிருப்பு நலச் சங்கங்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொறியாளர்களின் பங்களிப்புடன் ஒரு இயக்கமாக முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளோம் என மாநகராட்சி ஆணையர் சமீரன் தெரிவித்தார்
