மதுரை நாகமலை புதுக்கோட்டையில் நடைபெற்ற திமுக நிர்வாகியின் இல்ல விழாவில், திமுக துணைப் பொதுச்செயலாளரும் மகளிர் அணிச் செயலாளருமான கனிமொழி எம்.பி. கலந்து கொண்டார். விழாவில் திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்திய அவர், தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, திமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் தொடர்ந்து சோதனைகள் நடத்தப்படுவது குறித்துப் பேசிய கனிமொழி, திமுகவைப் பழிவாங்கும் நோக்கில் முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குகள் தொடரப்படுவதாகவும், வீடுகளில் சோதனை என்ற பெயரில் மீண்டும் மீண்டும் பொய் வழக்குகள் போட்டு அவர்களை அச்சுறுத்தி, விமர்சனம் செய்வதைத் தடுத்துவிடலாம் என நினைப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும், எத்தனையோ சோதனைகளைக் கடந்து வந்த இயக்கம் திமுக என்றும், கட்சியில் இருப்பவர்கள் யாரும் இதற்குப் பயப்படக் கூடியவர்கள் அல்ல என்றும் தெரிவித்தார்.
எத்தனை பொய் வழக்குகள் தொடரப்பட்டாலும், அனைத்து வழக்குகளிலும் வெற்றி பெற்று திமுக மீண்டு நிற்கும் என்றும் கூறினார். தவறு நடந்ததற்காக நடவடிக்கை எடுக்காமல், பழிவாங்கும் நோக்கில் சோதனைகள் நடத்தப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்துப் பேசிய கனிமொழி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், குழந்தைகள் காணாமல் போவது, கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாகக் குறிப்பிட்டார்.
போதைப்பொருள் பறிமுதல் சம்பவங்களையும் சுட்டிக்காட்டிய அவர், சமீபத்தில் 140 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். தவெக நிர்வாகிகள் சிலர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டிய அவர், இதுபோன்ற சம்பவங்களில் அரசு உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என விமர்சித்தார்.
சபாநாயகரையே ஒருவர் தாக்கும் அளவுக்கு சம்பவங்கள் நடைபெறுவதாகக் கூறிய கனிமொழி, இவ்வளவு பிரச்சினைகள் நிகழ்ந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும், காவல்துறையை நேரடியாகத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் மௌனமாக இருப்பதாகவும் விமர்சித்தார்.
திமுக ஆட்சிக் காலத்திலும் குற்றங்கள் நடைபெற்றதாக அமைச்சர்கள் கூறி வருவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், கடந்த ஆட்சியைவிட தற்போதைய ஆட்சியில் முதலீடுகள் அதிகரித்துள்ளதாகக் கூறுவது வேறு; கடந்த ஆட்சியிலும் குற்றங்கள் அதிகம் நடைபெற்றதாகக் கூறுவது வேறு எனத் தெரிவித்தார். குற்றங்கள் தொடர்பாக இப்படிப் பதிலளிப்பது தவறு என்றும் கூறினார்.
திமுக ஆட்சிக் காலத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரடியாகத் தொடர்புகொண்டு மன்னிப்புக் கேட்ட அப்போதைய முதலமைச்சரைச் சுட்டிக்காட்டிய கனிமொழி, தற்போது மன்னிப்புகூடக் கேட்க முடியாத நிலையில் முதலமைச்சர் இருப்பதாக விமர்சித்தார்.
