புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் நூதன முறையில் பொதுமக்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் சைபர் குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.
முத்தியால்பேட்டையைச் சேர்ந்த ஒருவரின் வங்கிக் கணக்கில் இருந்து எந்தப் பரிவர்த்தனையும் செய்யாமலேயே ரூ.1,86,488 மாயமானது. இதேபோல், லோன் தருவதாகக் கூறி பெண்ணிடம் ரூ.79,400 மோசடி செய்தது, OLX மூலம் லேப்டாப் உதிரிபாகங்கள் வாங்க முயன்றவரிடம் ரூ.17 ஆயிரம் பறித்தது, பெண்ணின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி அவரது நண்பரிடம் பணம் பெற்றது என அடுத்தடுத்து மோசடிகள் அரங்கேறியுள்ளன.
வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1.86 லட்சம் மாயம்:
புதுச்சேரி முத்தியால்பேட்டையைச் சேர்ந்த ஒருவரின் வங்கிக் கணக்கில் இருந்து திடீரென பணம் குறைந்துள்ளது. இதுகுறித்து வங்கியில் விசாரித்தபோது, அவருக்குத் தெரியாமலும் அனுமதியின்றியும் ரூ.1,86,488 எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. வங்கிக் கணக்கில் இருந்து எந்தப் பரிவர்த்தனையும் மேற்கொள்ளாத நிலையில் பணம் எடுக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்த அவர், சைபர் கிரைம் இணையதளம் மூலம் புகார் அளித்தார். இந்தப் புகார் முத்தியால்பேட்டை காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
லோன் தருவதாகக் கூறி ரூ.79,400 மோசடி:
புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சேர்ந்த பெண் ஒருவரை லோன் செயலி மூலம் தொடர்புகொண்ட மர்ம நபர்கள், ரூ.5 லட்சம் கடன் கிடைக்கும் என ஆசை காட்டியுள்ளனர். இதனை நம்பிய அந்தப் பெண், கடன் பெறுவதற்கான செயலாக்கக் கட்டணம் மற்றும் இதர கட்டணங்கள் எனக் கூறப்பட்ட தொகையைப் பல தவணைகளாக மொத்தம் ரூ.79,400 அனுப்பியுள்ளார்.
ஆனால், அவருக்குக் கடன் தொகை கிடைக்கவில்லை. பணம் பெற்ற நபர்களைத் தொடர்புகொள்ள முயன்றபோது அவர்கள் அழைப்புகளை ஏற்கவில்லை. இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
OLX மூலம் ரூ.17 ஆயிரம் இழப்பு:
புதுச்சேரி குரும்பாபேட்டையைச் சேர்ந்த ஒருவர், OLX இணையதளத்தில் லேப்டாப் உதிரிபாகங்கள் வாங்குவதற்காக டெல்லியைச் சேர்ந்த இம்ரான் அலி என்பவரை வாட்ஸ்அப் மூலம் தொடர்புகொண்டுள்ளார். அவர் கூறியபடி ரூ.17 ஆயிரம் அனுப்பியுள்ளார். ஆனால், பொருட்கள் வந்து சேரவில்லை. அனுப்பிய பணமும் திரும்பக் கிடைக்கவில்லை.
பணம் பெற்ற நபர் குறுஞ்செய்திகளுக்கும் பதிலளிக்காததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெண்ணின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு:
அரியாங்குப்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் பெயர் மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்தி மர்ம நபர் ஒருவர் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கை உருவாக்கியுள்ளார்.
அந்தக் கணக்கின் மூலம் அப்பெண்ணின் நண்பர்களைத் தொடர்புகொண்டு, அவசரமாக ரூ.1,000 அனுப்புமாறு கேட்டுள்ளார். இதனை உண்மை என நம்பிய நண்பர் ஒருவர் ரூ.1,000 அனுப்பியுள்ளார். பின்னர்தான் அது போலி கணக்கு என்பது தெரியவந்தது.
இதுகுறித்து அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்றுள்ள இந்த சைபர் மோசடி சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி, மோசடியில் ஈடுபட்டவர்களைத் தேடி வருகின்றனர்.
