திருப்பரங்குன்றம் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது – “சிறுபான்மை மக்களுக்கு பெரும்பான்மை இந்து மக்கள் அளிக்கும் பாதுகாப்பே சிறந்தது”; மத அடிப்படைவாதிகளே பிரச்சினைக்குக் காரணம்! – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன்
சென்னை பட்டினப்பாக்கத்தில் நடைபெற்ற AITUC மீனவர் தொழிலாளர் சங்கத்தின் பெயர்ப் பலகை திறப்பு விழாவில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மீனவர்களின் கோரிக்கைகள், காசிமேடு மீனவர்கள் உயிரிழந்த விவகாரம், பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டம், திருப்பரங்குன்றம் தீர்ப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கருத்துத் தெரிவித்தார்.
மீனவர்கள் தொன்மையான சமூகத்தினர் என்றும், தற்போது அவர்கள் சங்கத்தைத் தொடங்கியுள்ளதாகவும் குறிப்பிட்ட வீரபாண்டியன், மீனவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் குறித்து அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
அரசு கட்டித்தரும் வீடுகளில் ஏற்கெனவே பல மீனவர்கள் வசித்து வரும் நிலையில், வீடில்லாத மீனவர்களுக்கு அடுத்தகட்டமாகக் கட்டப்படும் வீடுகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
காசிமேடு பகுதியில் 9 மீனவர்கள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறிய அவர், உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் முதலமைச்சர் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும், உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். ஸ்ரீனிவாசபுரத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள வீடுகளை அரசு சீரமைத்துத் தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்தைத் தமிழக அரசு கைவிட வேண்டும் எனத் தெரிவித்த வீரபாண்டியன், கடல்சார்ந்த பகுதிகள் மீனவ மக்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடையவை என்றும், அப்பகுதி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சுகாதாரம் உள்ளிட்ட கூடுதல் திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.
மீனவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் நியாயமானவை என்பதால், அவற்றின் மீது அரசு தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் தீர்ப்பு குறித்து அதிருப்தி
தொடர்ந்து திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான தீர்ப்பு குறித்து பேசிய அவர், இந்தத் தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டார். நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தாலும், பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நிற்பதுதான் நீதி எனத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் இந்துக்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் ஒற்றுமையுடனும் நட்புடனும் வாழ்ந்து வருவதாகக் கூறிய அவர், சட்டம் அளிக்கும் பாதுகாப்பையும் தாண்டி, பெரும்பான்மை இந்து மக்கள் சிறுபான்மை மக்களுக்கு அளிக்கும் பாதுகாப்பு முக்கியமானது என்றார்.
பெரும்பாலான இந்து மக்கள் நல்லிணக்கத்தையும் அமைதியையும் விரும்புவதாகவும், சிறுபான்மை மக்களைப் பதற்றத்திலிருந்து பாதுகாப்பதில் அவர்கள் முக்கியப் பங்காற்றுவதாகவும் தெரிவித்தார்.
வழிபாட்டில் ஈடுபடும் இந்து மக்கள் வேறு என்றும், இந்து மதத்தின் பெயரால் பதற்றத்தை உருவாக்கும் மத அடிப்படைவாதிகள் வேறு என்றும் குறிப்பிட்ட வீரபாண்டியன், மத அடிப்படைவாதிகளால்தான் பிரச்சினைகள் உருவாகின்றன எனக் கூறினார்.
இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என அனைத்து மதத்தினரும் தமிழ்நாட்டில் ஒன்றுபட்டு வாழ்ந்து வருவதாகவும், இந்த நல்லிணக்கத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மக்களின் கூட்டு இசைவையும் மத நல்லிணக்கத்தையும் சிதைக்கும் எந்தவொரு தீர்ப்பும் நியாயமற்றதாகவே கருதப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
வைகோ கருத்து, தவெக நிர்வாகிகள் செயல்பாடு குறித்தும் கருத்து
தேனியில் தவெக நிர்வாகிகளே அணையைத் திறந்தது சரியான நடவடிக்கை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த வீரபாண்டியன், அரசியலில் வைகோ மிகப்பெரிய தலைவர் என்றும், குறிப்பாக இலங்கைத் தமிழர் விவகாரத்தில் அவர் எழுப்பிய குரல் முக்கியமானது என்றும் கூறினார்.
இருப்பினும், சமீபகாலமாக அவரது செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை என்றும் விமர்சித்தார்.
தவெக நிர்வாகிகள் காவல் நிலையங்களுக்குச் சென்று ஆய்வு மேற்கொள்வது, அதனை வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிடுவது உள்ளிட்ட செயல்பாடுகள் அதிகரித்து வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், இதுபோன்ற செயல்களை முதலமைச்சர்தான் தடுக்க வேண்டும் என்றார்.
போதைப்பொருட்களைத் தடுப்பதில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும், சட்ட விதிகளை மீறிச் செயல்படும் கட்சி நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மு.வீரபாண்டியன் தெரிவித்தார்.
