Homeசெய்திகள்ஆவடிகல்லூரி விடுதியில் போதைப்பொருள் புழக்கம்: 10 மாணவர்கள் அதிரடி நீக்கம்.. ஆவடி அருகே பரபரப்பு..!

கல்லூரி விடுதியில் போதைப்பொருள் புழக்கம்: 10 மாணவர்கள் அதிரடி நீக்கம்.. ஆவடி அருகே பரபரப்பு..!

-

- Advertisement -

கல்லூரி விடுதியில் போதைப்பொருள் புழக்கம்: 10 மாணவர்கள் அதிரடி நீக்க.. ஆவடி அருகே பரபரப்பு..!

“என் பிள்ளை நன்றாகப் படித்துப் பெரிய ஆளாக வர வேண்டும்” என்ற உயரிய கனவோடு, லட்சக்கணக்கில் கட்டணம் செலுத்தித் தங்கள் பிள்ளைகளைக் கல்லூரி விடுதிகளில் சேர்க்கின்றனர் பெற்றோர்கள். ஆனால், கல்வி கற்கச் சென்ற இடமே மாணவர்களின் எதிர்காலத்தைச் சிதைக்கும் களமாக மாறினால் என்ன செய்வது? ஆவடி அருகே முத்தாபுதுப்பேட்டையில் அமைந்துள்ள ஆலிம் முகமது சாலிக் பொறியியல் கல்லூரியில் அரங்கேறியுள்ள சம்பவம், இத்தகையதொரு அச்சத்தையும் கேள்வியையுமே சமூகத்தின் முன்வைத்துள்ளது.

நம்பிக்கையும் அதிர்ச்சியும்

அனைத்து மதங்களைச் சேர்ந்த மாணவர்களும், வெளிமாநில மாணவர்களும் ஒற்றுமையாகப் பயிலும் கல்வி நிறுவனமாகவும், தரமான விடுதி வசதி கொண்டதாகவும் நற்பெயர் பெற்றிருந்தது இக்கல்லூரி. ஆனால், அண்மையில் இங்கு எடுக்கப்பட்ட ஒரு அதிரடி நடவடிக்கை கல்வியாளர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விடுதியில் தங்கியிருந்த 10 மாணவர்கள் ஒரே நாளில் கல்லூரியிலிருந்தே நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளனர்.

நிர்வாகத்தின் பதற்றமும் மர்மமும்

மாணவர்கள் நீக்கப்பட்டதற்கான காரணமாக, “அவர்கள் விடுதியில் சிகரெட் பிடித்தார்கள்” எனக் கல்லூரி நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது. கல்வி வளாகத்தில் புகைபிடிப்பது தவறு என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், அத்தகைய தவறுகளுக்கு எச்சரிக்கை விடுத்தோ, அபராதம் விதித்தோ அல்லது பெற்றோரை அழைத்து அறிவுரை வழங்கியோ திருத்துவதுதான் வழக்கம். அதைவிடுத்து, ஒரே நேரத்தில் 10 மாணவர்களின் கல்வி வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கும் வகையில் நிரந்தர நீக்கம் செய்திருப்பது பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இதுகுறித்து விளக்கம் கேட்கக் கல்லூரிப் பேராசிரியர் பார்த்திபனைத் தொடர்பு கொண்டபோது, கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் அவர் அழைப்பைத் துண்டித்தது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

விடுதிக்குள் கஞ்சா புழக்கமா?

உண்மை நிலவரம் குறித்து மாணவர்கள் மத்தியில் விசாரித்தபோது அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வெறும் சிகரெட் விவகாரம் மட்டுமல்லாது, விடுதிக்குள் கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் தாராளமாகப் புழங்குவதாகக் கூறப்படுகிறது. இது உண்மையெனில், மிகுந்த பாதுகாப்பு நிறைந்த கல்லூரி விடுதிக்குள் போதைப்பொருட்கள் எவ்வாறு நுழைந்தன? காவலாளிகளும், விடுதி நிர்வாகமும் என்ன செய்து கொண்டிருந்தன? என்ற கேள்விகள் எழுகின்றன. மேலும், முத்தாபுதுப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளிலேயே போதைப்பொருள் விற்பனை எளிதாக நடப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஆலிம் முகமது கல்லூரி- நீக்கப்பட்ட மாணவர்கள்

பலிகடா ஆக்கப்படும் மாணவர்கள்

18 முதல் 20 வயதுக்குட்பட்ட, குடும்பத்தை விட்டுப் பிரிந்து தங்கியிருக்கும் இளம் மாணவர்கள் தவறான பாதைக்குச் சென்றால், அவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய தார்மீகப் பொறுப்பு கல்வி நிறுவனங்களுக்கு உண்டு. அதை விடுத்து, போதைப்பொருள் ஊடுருவலைத் தடுக்கத் தவறிய தங்களது நிர்வாக அலட்சியத்தையும், கல்லூரியின் பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுவிடும் என்பதையும் மறைக்க, மாணவர்களை வெளியேற்றிப் பலிகடா ஆக்குவது எந்த வகையில் நியாயம்? லட்சக்கணக்கில் கடன் வாங்கிப் படிக்க வைத்த பெற்றோர்களின் நிலை என்னவாகும்?  முதலில் சஸ்பெண்ட் செய்யப்பட்டு விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், விசாரணையின் போது டிசி-யை கொடுத்து கல்லூரியில் இருந்து நிரந்தரமாக வெளியேறும்படி கூறியதாக பெற்றோர் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

காவல்துறையின் தலையீடு அவசியம்

“எங்கள் பிள்ளைகளைத் தண்டிப்பதற்கு முன்பு, விடுதிக்குள் போதைப்பொருள் எப்படி வந்தது என்பதை விசாரித்தீர்களா?” என்ற பெற்றோர்களின் கேள்விக்கு நிர்வாகத்திடம் பதிலில்லை. கல்லூரி நிர்வாகம் தனது நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்ளக் காவல்துறையில் புகார் அளிக்கத் தயங்கலாம். ஆனால், மாணவர் சமுதாயத்தின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு காவல்துறை இதில் தானாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும்.

விடுதிக்குள் போதைப்பொருள் விநியோகிக்கும் வெளிநபர்கள் யார் என்பதைக் கண்டறிந்து, அந்த வலையை அறுத்தெறிய வேண்டும். 10 மாணவர்களை வெளியேற்றியதோடு பிரச்சினை முடிந்துவிட்டதாக நிர்வாகம் கருதினால் அது தவறு; இனிமேல்தான் உண்மையான கண்காணிப்பும் நடவடிக்கையும் தொடங்கப்பட வேண்டும் என்பதே பெற்றோர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

MUST READ