Homeசெய்திகள்மாவட்டம்திருவாரூர்:  கருகும் சம்பா பயிர்கள்: மழை வேண்டி 'ஐயோ கொடும்பாவி' செய்து வித்தியாசமான வழிபாடு!

திருவாரூர்:  கருகும் சம்பா பயிர்கள்: மழை வேண்டி ‘ஐயோ கொடும்பாவி’ செய்து வித்தியாசமான வழிபாடு!

-

- Advertisement -
திருவாரூர் கொடும்பாவி வழிபாடு
AI Image

 மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் பாதியிலேயே நிறுத்தப்பட்டதாலும், பருவமழையும் பொய்த்துப் போனதாலும் திருவாரூர் மாவட்டத்தில்  சம்பா பயிர்கள் கருகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. பயிர்களைக் காப்பாற்ற வழியின்றித் தவிக்கும் விவசாயிகள், மழை வேண்டி சேற்றில் மனித உருவம் செய்து கும்மியடித்து வித்தியாசமான வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

5,000 ஏக்கர் சம்பா பயிர்கள் பாதிப்பு

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி தாலுகாவிற்கு உட்பட்ட திருமதிகுன்னம், பருத்தியூர், கண்கொடுத்தவனிதம், தாழைக்குடி, மேலராதநல்லூர், நீலனூர், சத்தியவாடி, செட்டிசிமிழி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 5,000 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்துள்ளனர்.

  • வறண்ட நீர்நிலைகள்: மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் 40 நாட்களிலேயே நிறுத்தப்பட்டதால், இப்பகுதிகளுக்குப் போதிய பாசன நீர் கிடைக்கவில்லை. இதனால் ஆறுகள் மற்றும் பாசன வாய்க்கால்கள் வறண்டு கிடக்கின்றன.

  • பொய்த்துப் போன நம்பிக்கை: வழக்கமாக கார்த்திகை, மார்கழி மாதங்களில் பெய்யும் மழை கைகொடுக்கும் என எதிர்பார்த்திருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. நீர்மூழ்கி மோட்டார்கள் மூலம் தண்ணீர் பாய்ச்சியும் பயிர்கள் கருகி வருவதால், சாகுபடிக்காகப் பெரும் தொகையைச் செலவு செய்த விவசாயிகள் கடும் வேதனையில் உள்ளனர்.

மழை வேண்டி ‘ஐயோ கொடும்பாவி’ வழிபாடு

கருகும் பயிர்களைக் காப்பாற்ற மழை பெய்ய வேண்டி, திருமதிகுன்னம் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட பெண் விவசாயிகள் ஒன்றிணைந்து சாலையில் சேற்றால் மனித உருவம் செய்து வழிபாடு நடத்தினர்.

 ‘ஐயோ கொடும்பாவி’ என்றழைக்கப்படும் அந்த உருவத்தைச் சுற்றி நின்று ஒப்பாரிப் பாடல்கள் பாடியும், கும்மியடித்தும் அவர்கள் மழைக்காக வேண்டினர். 20 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்று வழிபாடு செய்தபோது மழை பெய்ததாகவும், இது தங்கள் பகுதியின் பாரம்பரிய ஐதீகம் என்றும் அப்பெண்கள் தெரிவித்தனர். அவ்வழியாகச் செல்லும் பொதுமக்களும் கொடும்பாவிக்கு மரியாதை செலுத்தி தங்களால் இயன்ற தொகையை வழங்கிச் செல்கின்றனர்.

விவசாயிகளின் வேதனைக் குரல்

இந்த வழிபாடு குறித்து பெண் விவசாயிகல் , “எங்கள் ஊரில் மட்டுமல்ல, எங்கு பார்த்தாலும் மழை இல்லை; விவசாயம் எல்லாம் காய்ந்து வருகிறது. அரசாங்கமும் எந்த உதவியும் செய்யவில்லை. அதனால்தான் காலையிலிருந்து இப்படி வழிபாடு செய்கிறோம். விவசாயத்தை நம்பித்தான் நாங்கள் வாழ்கிறோம், அரசாங்கம் எங்களுக்கு உதவ வேண்டும்.”என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

MUST READ