அண்ணாமலை இன்றி தொடங்கப்பட்ட பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம்
சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்றி அக்கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
தமிழக முன்னாள் முதலமைச்சர்களான அண்ணா, ஜெயலலிதா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை பேசிய நிலையில், பாஜக கூட்டணியில் இருந்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிமுக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அத்துடன், 2024 நாடாளுமன்றத் தேர்தல், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக உடன் கூட்டணி இல்லை. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும் என அக்கட்சித் தலைமைத் தெரிவித்திருந்தது. இதனிடையே டெல்லி சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் சென்னையில் அண்ணாமலை இன்றி தொடங்கப்பட்ட பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. பாஜக மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் கூட்டத்திற்கு அண்ணாமலை இன்னும் வராததால், கேசவ விநாயகம், எச்.ராஜா ஆகியோர் நீண்ட நேரமாக மேடையில் அமர்ந்திருந்த நிலையில், அண்ணாமலை வரும் முன்பே வந்தே மாதரம் பாடல் பாடி கூட்டம் தொடங்கப்பட்டது. முன்பே, அண்ணாமலை இல்லாமல் பெருங்கோட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.