அம்பத்தூரில் பத்தடி நீளம் கொண்ட மலைப்பாம்பை தீயணைப்பு துறையினர் லாவகமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்

மிக்ஜாம் புயல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை புரட்டி எடுத்த நிலையில், ஆங்காங்கே தேங்கி இருந்த மழை நீர் தற்போது வடிந்து வருகிறது. இந்நிலையில் அம்பத்தூரின் பெரும்பாலான பகுதிகளில் இடுப்பளவுக்கும் மேல் மழை நீர் தேங்கி இருந்தது. இதனால் பல ஊர்வன மற்றும் விஷ ஜந்துக்கள் ஊடுருவல் மற்றும் நடமாற்றம் அதிகளவில் காணப்பட்டது.

மழை வெள்ளம் வடிந்து உள்ள நிலையில் அம்பத்தூர் ஆவின் பால் பண்ணை அருகே மலைப்பாம்பு ஒன்று சுற்றித் திரிவதாக ஆவடி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த ஆவடி தீயணைப்புதுறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி 10 அடி நீளம் கொண்ட அந்த மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் வனத்துறையினரிடம் அந்த மலைப்பாம்பை அவர்கள் ஒப்படைத்தனர். இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. வெள்ளம் வடிந்த பகுதிகளில் உள்ளவர்கள் தங்களது வீட்டை ஒருமுறை சோதனை செய்யுமாறும், விஷ ஜந்துக்கள் ஏதேனும் இருப்பின் அருகே உள்ள தீயணைப்புதுறையினரை தொடர்பு கொள்ளவும் அவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.


