நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா எலச்சிபாளையம் ஒன்றியம் கோக்கலை ஊராட்சியில் உள்ள கோக்கலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளிடம் ஒன்றரை கோடி ரூபாய் வரை கூட்டுறவு கடன் சங்கத்தில் வேலை செய்யும் பெரியசாமி என்பவர் ரசீது கொடுக்காமல் பணத்தை வசூலித்து மோசடி செய்து இருப்பதாகவும் இது போல் சுமார் ஒன்றரை கோடி வரை மோசடி நடந்திருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இது குறித்து கூட்டுறவுத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
கோக்கலை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் இருந்து விவசாயிகளுக்கு கடன் நிலுவை கட்ட வேண்டும் என்று கடிதம் வந்துள்ளது இதனை அடுத்து தாங்கள் சரியாக கடன் கட்டி வருவதாகவும், ஏன் கடன் தொகை கட்டவில்லை என தங்களுக்கு நோட்டீஸ் வருகிறது என கேட்டு கோகலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு விவசாயிகள் சென்றுள்ளனர்.

அப்போது கடன் கட்ட கொடுத்த பணம், டெபாசிட் பணம், நகை கடனில் கூடுதலாக பெற்ற பணம் என சுமார் 1.50 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து இன்று திருச்செங்கோடு துணை பதிவாளர் இந்திரா தலைமையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள். வங்கியில் கணக்கு வைத்திருந்த அனைவரையும் அழைத்து அவரது கணக்கில் பணம் சரியாக உள்ளதா? என்பது குறித்து ஆய்வு நடத்தி வருகிறார்கள். இரண்டு நாட்களுக்கு பிறகு தான் எவ்வளவு பணம் கையாடல் செய்யப்பட்டது என்பது தெரியவரும். விவசாயிகளும், பொதுமக்களும் கவலையாக வங்கி முன்பு கூடி உள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மகளிர் சுய உதவி குழுக்களுக்காக வழங்கப்பட்ட கடன், சேமிப்பு கணக்கில் உள்ள பணம், டெபாசிட் கணக்கில் உள்ள பணம் என பல விதங்களில் பணம் எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வங்கியில் கணக்கு வைத்திருக்கும் மணிசங்கர் என்பவர் கூறும் போது, கடன் தொகையை கட்டாமல் உள்ளதாக வந்த தகவலை அடுத்து தான் மோசடி செய்யப்பட்டது மக்களுக்கு தெரிய வந்தது. சுமார் ஒன்றரை கோடி ரூபாய் வரை மோசடி செய்யப்பட்டு இருக்கலாம் என தெரிய வருகிறது. அனைத்து சேமிப்பு கணக்குகளிலும் பணம் எடுக்கப்பட்டுள்ளது, மேலும் டெபாசிட் பணம் முறைகேடாக எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார். இது குறித்து கூட்டுறவுத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த மோசடி குறித்து எலச்சிபாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள் இந்த மோசடி சம்பவத்தால் கோக்கலை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த சம்பவத்தில் வங்கியில் வேலை செய்த பெரியசாமி முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார். இந்த வங்கியின் செயலாளராக உள்ள ராஜேந்திரன், பெரியசாமி மற்றும் வங்கி ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.