முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்னர் அதிமுக – பாஜக இடையே கூட்டணி ஏற்பட்டது. இரு கட்சிகளும் இணைந்து கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரேயொரு தொகுதி (தேனி)யில் மட்டுமே வெற்றி பெற்றது. அதன் பின்னர் நடந்த சட்டமன்ற தேர்தலிலும் அந்த கூட்டணி தோல்வியை தழுவியது. பாஜக வெறும் 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அதன் பின்னர் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் இரு கட்சிகளும் பிரிந்து களம் கண்டு படு தோல்வி அடைந்தது. இந்த சூழ்நிலையில் அதிமுகவின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்றும் ஊழலில் சிக்கிய முன்னாள் அமைச்சர்கள் சிறைக்கு செல்வார்கள் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆவேசமாக பேசினார். தொடர்ந்து அதிமுகவில் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு வலை வீசி அதிமுகவை உடைக்க முயற்சியும் செய்தார்.
இந்த கட்டத்தில் உஷாரான அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். அடுத்த ஒரு வாரத்தில் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் அதிகாரப் பூர்வமாக அறிவித்தார். ஆனால் இதுவரை பாஜக தரப்பினர் இதுகுறித்து வாய்திறக்க வில்லை.

இந்நிலையில் முன்னாள் அமைச்சரும் அதிமுக மாநில சிறுபான்மை பிரிவு செயலாளருமான எஸ். அப்துல் ரஹீமை அவருடைய அலுவலகத்தில் சந்தித்து பேசியபோது அவர் அளித்த பேட்டி.
கேள்வி – அதிமுக -பாஜக கூட்டணி மீண்டும் தொடர்வதற்கு வாய்ப்பு இருக்கிறதா?
எஸ்.அப்துல்ரஹீம் பதில்- இனிமேல் பாஜகவுடன் அதிமுக கூட்டணி தொடர்வதற்கு நூறு சதவீதம் வாய்ப்பு இல்லை என்று எங்கள் பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமியே தெரிவித்து விட்டார். வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பும் சரி, அல்லது தேர்தல் முடிந்த பின்னரும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது.
கேள்வி- இவ்வளவு தீர்க்கமான முடிவு எடுப்பதற்கு காரணம் என்ன?
எஸ். அப்துல் ரஹீம் கடந்த நாடாளுமன்ற தேர்தல், அதனை தொடர்ந்து சட்டமன்றத் தேர்தல் வரை அதிமுக – பாஜக கூட்டணி இருந்தது. அந்த தேர்தல்களில் எல்லாம் சிறுபான்மை மக்களின் ஓட்டு எங்களுக்கு எதிராகவே இருந்தது. தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியை ஏற்றுக்கொள்ள மக்கள் மறுக்கிறார்கள். அதனால் அவர்களை விட்டு விலக வேண்டிய சூழ்நிலை. இனிமேல் எக்காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது.
கேள்வி – அதிமுக வேறு எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கப் போகிறது?
எஸ்.அப்துல்ரஹீம்- எங்களுடைய அம்மா பாணியில் அண்ணன் எடப்பாடி யாரும் கூட்டணி குறித்து நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் தைரியமாகவும், சுறுசுறுப்போடும் களத்தில் இறங்கி வேலை பாருங்கள் என்று சொல்லிவிட்டார். அதனால் கூட்டணி அமைப்பது குறித்து தலைமை பார்த்துக் கொள்ளும்.
கேள்வி – அதிமுகவை குறித்து பாஜகவும், பாஜக குறித்து அதிமுகவும் விமர்சனம் செய்வதில்லை. இரண்டு கட்சிகளும் ரகசிய உறவு வைத்திருக்கிறதா?
எஸ். அப்துல் ரஹீம் அப்படி எல்லாம் எதுவும் இல்லை. தற்போது கூட எங்கள் பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடியார் மத்திய அரசை விமர்சனம் செய்துள்ளார். மாநில அரசின் நிதியை மத்திய அரசு தர மறுக்கிறது என்று குற்றம்சாட்டி இருக்கிறார். விமர்சனம் செய்ய வேண்டியதை விமர்சனம் செய்து வருகிறோம். தேவையற்றதை தவிர்த்து விடுகிறோம். அதிமுக ஆட்சியின் போது பாஜகவின் ‘B’ டீம் அதிமுக என்றார்கள். “கோ பேக் மோடி” என்று பலூனை பறக்க வைத்தார்கள். தற்போது திமுக அமைச்சர்கள் மீது உள்ள வழக்குகளுக்கு பயந்து பிரதமர் மோடியை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறார்கள். அமலாக்கத்துறைக்கு ED க்கு பயந்து அமைச்சர் உதயநிதி பிரதமரை ரகசியமாக சந்தித்து பேசுகிறார். பாஜகவின் உண்மையான B டீம் திமுகதான் என்பதை உறுதியாகியுள்ளது.
கேள்வி – நாடாளுமன்ற தேர்தலில் உங்களுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?
எஸ்.அப்துல்ரஹீம்- 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும். ஆளும் கட்சியின் மீது மக்களுக்கு திருப்தி இல்லை. மக்கள் வெறுத்து போய் இருக்கிறார்கள். தமிழ் நாட்டில் எந்த பணியும் நடைபெறவில்லை. அனைத்து சாலைகளும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. எங்கள் ஆட்சியில் கட்டத் தொடங்கிய பாலங்கள், சாலைகள் இன்னும் நிறைவடையவில்லை. மக்கள் வெறுத்து போய் இருக்கிறார்கள். திமுக ஆட்சியை விட அதிமுக நிர்வாகம் பரவாயில்லை என்று மக்கள் பேசத் தொடங்கி விட்டார்கள். அதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும்.
அதிமுக வெற்றி பெறுவதற்கு வாழ்த்து தெரிவித்து விடைபெற்று திரும்பினோம்.