ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் 3, வை ராஜா வை உள்ளிட்ட படங்களுக்குப் பிறகு உருவாகியுள்ள படம் தான் லால் சலாம். இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், ரஜினி, நிரோஷா மற்றும் பலர் நடித்துள்ளனர். ரஜினி இந்த படத்தில் மொய்தீன் பாய் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நிரோஷா நடித்துள்ளார். சமீபத்தில் படத்தின் டீசர் அதைத் தொடர்ந்து முதல் இரண்டு பாடல்களும் வெளியாகி கவனம் பெற்றது. அதே சமயம் இப்படம் வருகின்ற பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் ரஜினி, ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஏ ஆர் ரகுமான், விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதற்கிடையில் உத்திரபிரதேச மாநிலத்தில் இருக்கும் அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொண்ட ரஜினியை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வந்தனர். அதேசமயம் லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ரஜினியை சங்கி என்று சொல்வது குறித்து வேதனை தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது, “சமூக வலைதளங்களில் இருந்து நான் எப்போதும் விலகியே இருக்கிறேன். இருந்தபோதிலும் என்னுடைய டீம் அடிக்கடி ஒரு விஷயத்தை சொல்லிக் கொண்டே இருந்தனர். அதன்படி சங்கி என்ற வார்த்தை எனது மனதை மிகவும் உறுத்துகிறது. உங்கள் அனைவருக்கும் தெளிவாகப் புரியும்படி சொல்ல விரும்புகிறேன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சங்கி கிடையாது. சங்கின்னு சொல்லாதீங்க. எங்க அப்பா சங்கியா இருந்திருந்தா லால் சலாம் படத்தில் நடிக்க சம்மதித்திருக்கவே மாட்டார். மதங்களைக் கடந்து மனிதர்களை மட்டும் நேசிக்க கூடியவர் தான் என் அப்பா” என்று பேசியுள்ளார்.