தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட தமிழக அசரின் உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்து வருகிறது.


தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே மாதம் 5 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் வெளியாக உள்ளது. இதனிடையே தமிழ்நாட்டின் நிர்வாக அமைப்பில் முக்கிய மாற்றமாக, ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட தமிழக அசரின் உயர் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்து வருகிறது.
இந்நிலையில், மாநிலத்தின் புதிய தலைமைச் செயலாளராக சாய் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு தமிழ்நாடு காகித நிறுவனத்தின் தலைமை மேலாண் இயக்குநராக பணியாற்றி வந்தார்.
இந்த மாற்றம் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போதைய தலைமைச் செயலாளராக இருந்த முருகானந்தம் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், அவரது இடத்திற்கு சாய் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனுடன், லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் ஆயுதப்படை டி.ஜி.பி. பதவியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி.யாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றப்பட்டு, அந்தப் பொறுப்புக்கு சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் காலத்தில் நிர்வாகத்தின் நடுநிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில் இத்தகைய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. முக்கிய நிர்வாக பதவிகளில் பணிபுரியும் அதிகாரிகள் மாற்றப்படுவது, தேர்தல் ஆணையத்தின் வழக்கமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
புதிய தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள சாய் குமார், முந்தைய ஆட்சிக் காலத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தனிச் செயலாளராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாற்றங்கள் மாநில அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறவனத்தின் புதிய தலைவராக V.C. அசோகன் பொறுப்பேற்பு…
