அம்மா உணவகங்களுக்கு 2 மடங்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு
சென்னையில் இயங்கும் அம்மா உணவகங்களில் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் , கடந்த காலங்களை விட இரண்டு மடங்கு கூடுதலாக சென்னை மாநகராட்சி நிதி ஒதுக்கியுள்ளது.
2023-24-ம் ஜான் நிதிஆண்டுக்கான பட்ஜெட்டை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இரண்டாவது முறையாக கடந்த திங்கள் கிழமை தாக்கல் செய்தார். இதில் கல்வி, உட்கட்டமைப்பு, சுகாதாரம் போன்றவை மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. இதே போல், சென்னையில் இயங்கும் அம்மா உணவகங்களுக்கு கடந்த காலங்களை விட இரண்டு மடங்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி முழுவதும் 400க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் இயங்குகின்றன.இதில் 3 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நாள்தோறும் ஆயிரக்கணக்கான எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு அம்மா உணவகத்தின் பணியாளர்கள் ஊதியம், அரசி, பருப்பு, காய்கறி கொள்முதல் பராமரிப்பு என சுமார் 120 கோடி ரூபாய் மாநகராட்சிக்கு செலவும், 14 கோடி ரூபாய் வரவும் மாநகராட்சிக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அம்மா உணவகத்தின் பராமரிப்பிற்காக மட்டும் 2021-22ல் 4.38 கோடியும், 2022-23ல் 4.85 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில், 2023-24ல் அம்மா உணவகங்களில் சமையல் உபகரணங்கள், கட்டிட சீரமைப்பு உட்பட மேம்படுத்தவும், நோக்கிலும் இந்த நிதியாண்டில் பராமரிப்புக்காக மட்டும் 9.65 கோடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இருந்து மிகவும் குறைவான அளவு வருவாய் மட்டுமே கிடைப்பதால் சுமார் 780 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில், அம்மா உணவகங்களை மேம்படுத்த சென்னை மாநகராட்சி கூடுதல் நிதி ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.