உங்களுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்
கோலோச்ச உங்களுக்கு ஒரு மாபெரும் பேரரசு வேண்டுமா? உங்களை ஆளுங்கள் – புப்லிலியஸ் சைரஸ்
அமெரிக்கர்கள் முதல் விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்புவது குறித்தப் போட்டியில் ஈடுபட்டபோது, அவ்வீரர்கள் மற்ற எல்லாவற்றையும்விட அதிகமாக ஒரு திறனில் கைதேர்ந்து விளங்குவதற்கு அவர்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்டது. எந்தச் சூழலிலும் பீதியடையாமல் இருக்கும் திறன்தான் அது.

மக்கள் பீதியடைகின்றபோது தவறு செய்கின்றனர். அப்போது அவர்கள் அமைப்புமுறைகளை மீறுகின்றனர், செயல்முறைகளைப் புறக்கணிக்கின்றனர், விதிமுறைகளை மீறுகின்றனர். ஏற்கனவே போடப்பட்டுள்ள திட்டத்திலிருந்து விலகுகின்றனர். அவர்கள் தெளிவாகச் சிந்திப்பதை நிறுத்திவிட்டு வெறுமனே செயல்விடை அளிக்கின்றனர். ஆனால், அச்செயல்விடை, சிந்தித்து அளிக்கப்படுகின்ற ஒன்றாக இருப்பதில்லை.
பெரும்பாலான பிரச்சனைகளுக்கு மூலாதாரமாக விளங்குவது இதுதான்: கடைசிப் புள்ளிவரை எல்லாம் கச்சிதமாகத் திட்டமிடப்பட்டுச் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும்போது, திடீரென்று ஏதோ ஒன்று தவறாகப் போகிறது. உடனே நாம் உணர்ச்சிவசப்பட்டு மேலும் கீழும் குதிக்கத் தொடங்குகிறோம். நம்மில் பலர் எச்சரிக்கை மணியை ஒலிக்கின்ற நிலைக்குச் சென்றுவிடுமாம் நம்மை முறைத்துக் கொண்டு நிற்கின்ற பிரச்சனையை எதிர்கொள்வதைவிட இது எளிது என்பதுதான் அதற்குக் காரணம்.
பூமிக்கு மேலே 150 மைல் தூரத்தில் ஒரு சிறிய கார் அளவு இருக்கும் ஒரு விண்ணூர்தியில் நாம் பயணித்துக் கொண்டிருக்கும்போது நாம் பதற்றமடைவது என்பது மரணதேவனுக்கு நாம் விடுக்கும் அறைகூவலாகும் அங்கு பீதியடைவது தற்கொலை செய்து கொள்வதற்குச் சமம்.
அதனால் பீதியை வெளியேற்றுவதற்கு விண்வெளி வீரர்களுக்குப் பயிற்சியளிக்கப்பட வேண்டும். ஆனால் பீதி அவ்வளவு எளிதாக வெளியேறிவிடாது.
முதல் பயணத்திற்கு முன்பாக, நாசா விணவெளி வீரர்கள், அன்றைய தினம் நடக்கவிருந்த அனைத்து விஷயங்களையும் நூற்றுக்கணக்கான முறை ஒத்திகை பார்க்க வைக்கப்பட்டிருந்தனர். அன்றைய தினம் காலையில் அவர்கள் என்ன சாப்பிடுவர் என்பதிலிருந்து, விண்வெளித் தளத்திற்கு எப்படிச் செல்வர் என்பதுவரை பல விஷயங்கள் அதில் அடக்கம் விண்வெளிக் கலம் விண்ணில் ஏவப்படும்போது அவர்கள் எதைப் பார்ப்பர், எத்தகைய சத்தங்களை எதிர்கொள்வர் ஆகிய ‘அனுபவங்களையும்’ அவர்கள் பெற ஏற்பாடு செய்யப்பட்டது. இவை அனைத்தையும் அவர்கள் கணக்கிலடங்காத முறை செய்திருந்ததால், அது அவர்களுக்கு சுவாசம்போல ஓர் இயல்பான விஷயமாக ஆகிவிட்டிருந்தது.
மீண்டும் மீண்டும் பயிற்சி செய்வதன் மூலம் நிச்சயமின்மையையும் பயத்தையும் பயம் பெரும்பாலும் போக்கிவிடலாம். பயம் பெரும்பாலும் பரிச்சயமற்றச் சூழல்களை எதிர்கொள்வதிலிருந்து பிறக்கிறது. பரிச்சயமின்மைப் பிரச்சனைக்கு எளிதில் தீர்வு கண்டுவிடலாம் என்றாலும், அது சுலபமானதல்ல.
விண்வெளியில் உலகைச் சுற்றி வந்த முதல் அமெரிக்கரான ஜான் கிலென், கிட்டத்தட்ட ஒரு நாள் முழுவதும் விண்வெளியில் இருந்தபோதும் தன்னுடைய இதயத்துடிப்பை நிமிடத்திற்கு ஒரு நூறு என்ற அளவுக்குள்ளேயே வைத்திருந்தார். அவர் வெறுமனே விண்வெளி ஓடத்தை மட்டும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவில்லை, தன் உணர்ச்சிகளையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்.
ஆனால், ஒரு வாடிக்கையாளரையோ அல்லது ஓர் அந்நியரையோ தெருவில் கண்ட உடனேயே உங்களுடைய இதயம் எகிறிக் குதிக்கிறது. அல்லது ஒரு பெரிய கூட்டத்திற்கு முன்னால் பேச மேடை ஏறியவுடன் உங்கள் வயிறு பெரும் சத்தம் எழுப்புகிறது.
விண்வெளியில் இருக்கும்போது உணர்ச்சிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது நீங்கள் உயிருடன் இருப்பதை உறுதி செய்யும். ஒரு விண்கலத்தில் பயணிக்கின்றபோது, ஒரு தவறான பட்டனை அழுத்திவிட்டாலோ அல்லது வரிசை தவறி பட்டன்களை அழுத்திவிட்டாலோ, அல்லது குறிப்பிட்ட சில நொடிகளுக்கு முன்னதாக ஒரு பட்டனை அழுத்திவிட்டாலோ, அதன் விளைவுகள் பயங்கரமானவையாக இருக்கும்.
அதனால் விண்வெளி வீரர்களைப் பொறுத்தவரை, அவர்கள் எந்த அளவு திறமையான விமானிகளாக இருக்கிறார்கள் என்பது ஒரு பொருட்டல்ல. உங்களால் உங்களுடைய உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடிகிறதா என்பதுதான் அங்கு முக்கியம். பீதி உணர்வு தோன்றும்போது அதை அடக்கிக் கொண்டு, அடுத்துச் செய்யப்பட வேண்டிய வேலையில் உங்களுடைய கவனத்தை உங்களால் குவிக்க முடியுமா?
வாழ்க்கையும் அப்படித்தான். முட்டுக்கட்டைகள் நம்மை உணர்ச்சிவசப்பட வைக்கின்றன. அந்த உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்வதுதான் அத்தடைகளிலிருந்து மீள்வதற்கான ஒரே வழி.
ஸ்டோயிசிசம் இதை ‘அப்பத்தியா’ என்று அழைக்கிறது.
உளச் சமநிலை என்று இதற்குப் பொருள் கூறலாம். பகுத்தறிவுக்குப் பொருந்தாத அதீத உணர்ச்சிகள் இல்லாத ஒரு நிலை என்று இதை வர்ணிக்கலாம். உணர்ச்சிகளே இல்லாத நிலை அல்ல இது. தீங்கு விளைவிக்கின்ற, பயனற்ற உணர்ச்சிகள் இல்லாத நிலை இது. இதற்கு நீங்கள் எதிர்மறை உணர்ச்சிகளை முளையிலேயே கிள்ளியெறிந்துவிட வேண்டும்.
இது நாம் வளர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு திறன். அப்போது உங்களால் உங்களுடைய ஆற்றலைப் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் குவிக்க முடியும்.
உங்களுடைய மேலதிகாரியிடமிருந்து வருகின்ற ஒரு மின்னஞ்சல், உங்களுக்கு அளித்து வந்த ஒரு சலுகையை நிறுத்திவிட்டதாக உங்களுடைய வங்கியிலிருந்து வருகின்ற ஒரு தகவல். உங்களுக்கு வேண்டப்பட்ட ஒருவர் ஒரு விபத்தில் சிக்கியிருப்பதாக வருகின்ற தகவல். உங்களுடைய உள்ளம் சமநிலையில் இருந்தால், இதுபோன்ற பிரச்சனைகளுக்கு உணர்ச்சிவசப்பட்டுச் செயல்விடை அளிக்காமல் நிதானமாக அதை அணுக முடியும்.
‘த கிப்ட் ஆஃப் ஃபியர்’ என்ற நூலில் கேவின் டி பெக்கர் இக்கேள்விகளை எழுப்புகிறார்: “நீங்கள் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால், ‘இக்கணத்தில் நான் எதைப் பார்க்காமல் இருப்பதைத் தேர்ந்தெடுத்துள்ளேன்?’ என்று உங்களிடம் கேளுங்கள். சுய அலசல், விழிப்புணர்வு போன்றவற்றுக்கு பதிலாக பயத்தைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் எந்தெந்த முக்கியமான விஷயங்களை நீங்கள் இழந்திருக்கிறீர்கள்?”
இதை வேறு வார்த்தைகளில் கூற வேண்டுமென்றால் இப்படிக் கூறலாம்: ஒரு சூழல் குறித்து நீங்கள் மனமுடைந்து போவது உங்களுக்குக் கூடுதல் வழிகளைத் திறந்துவிடுகிறதா?
இல்லை என்பதே அதற்கான பதில்.
நீங்கள் எதிர்கொண்டுள்ள ஒரு சூழ்நிலையை உங்களுடைய ஓர் உணர்ச்சியால் மாற்ற முடியாது என்றால், அதை ஓர் உதவிகரமான உணர்ச்சி என்று அழைக்க முடியாது. மாறாக, அது உங்களுக்குத் தீங்கு விளைவிக்கின்ற ஒன்றாகத்தான் இருக்கும்.
ஆனால் உங்களுக்கு அப்போது அப்படிப்பட்ட உணர்ச்சிதான் தோன்றுகிறது என்று நீங்கள் வாதிடலாம்.
நீங்கள் அவ்வாறு உணரக்கூடாது என்று எவரும் கூறவில்லை. நீங்கள் அழக்கூடாது என்று யாரும் நிபந்தனை விதிக்கவில்லை. ‘ஓ’வென்று கத்தி அழ ஓரிரு நிமிடங்கள் தேவைப்பட்டால் தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்வதில்தான் உண்மையான வலிமை இருக்கிறது. இதை, “உணர்ச்சிகள் இல்லவே இல்லை என்று நடிப்பதைவிட உணர்ச்சிகளை உங்கள் சொல்லுக்குக் கட்டுப்பட்டவையாக ஆக்குவதில்தான் சூட்சுமம் அடங்கியுள்ளது,” என்று அமெரிக்க நூலாசிரியரான நசீம் தாலெப் அழகாக எடுத்துரைக்கிறார்.
அதனால் உணர்ச்சிகளை உணருங்கள். ஆனால் ஒரு பிரச்சனை குறித்து உணர்ச்சிவசப்படுவது என்பது வேறு, அதைக் கையாள்வது என்பது வேறு. இரண்டையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள். ஏனெனில், அவை இரவும் பகலும்போல ஒன்றுக்கொன்று நேரெதிரானவை.
உங்களுக்கு நீங்களே இப்படி நினைவுபடுத்திக் கொள்ளலாம்: ‘உணர்ச்சிகள் என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கவில்லை. அவை என் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை என்னால் பார்க்க முடிகிறது. இது குறித்து நான் பரவசப்படப் போவதுமில்லை, மனமுடையப் போவதுமில்லை.’
தர்க்கத்தின் உதவியால் நம்மால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியும். தர்க்கம் என்பது கேள்வி பதில்களை உள்ளடக்கிய ஒன்று. நிறையக் கேள்விகளைக் கேட்டு அவற்றுக்கான பதில்களைப் பெற்றால் மூலகாரணங்களை நம்மால் அடையாளம் காண முடியும். அதற்குப் பிறகு அவற்றைக் கையாள்வது எளிது.
அதற்கான ஓர் எடுத்துக்காட்டு:
நாம் பணத்தை இழந்துள்ளோம்.
பணத்தை இழப்பது தொழில்களில் வாடிக்கையாக நடைபெறும் விஷயம்தானே?
ஆமாம்.
இந்த இழப்பு மிக மோசமானதா?
அப்படியிருக்க வேண்டிய அவசியமில்லை.
அப்படியெனில், இது முற்றிலும் எதிர்பாராத ஒன்றல்ல, சரிதானே? அப்படியிருக்கும்போது, அது எப்படி மிக மோசமானதாக இருக்க முடியும்? எப்போதாவது நடக்கக் சாத்தியமுள்ள ஒரு விஷயம் நடந்துள்ளதற்கு எதற்கு இத்தனை ஆர்ப்பாட்டம்?
சரி. சரி. சரி.
அது மட்டுமல்ல. இதைவிட மோசமான சூழ்நிலைகளையெல்லாம் இதற்கு முன்பு நீங்கள் கையாண்டிருக்கிறீர்கள். இப்போதைய சூழல் குறித்துக் கோபப்படுவதற்கு பதிலாக, அப்போது கற்றுக் கொண்ட படிப்பினைகளை இதில் பயன்படுத்தினால் அது உங்களுக்குப் பலனளிக்குமல்லவா?
இப்படிப்பட்ட உரையாடலை உங்களுடன் நிகழ்த்த முயற்சி செய்யுங்கள். அப்போது உங்களுடைய உணர்ச்சிகளுக்கு என்ன நிகழ்கிறது என்று பாருங்கள். அவற்றால் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியாது.
என்ன இருந்தாலும் இவற்றால் பெரிதாக எதுவும் குடி முழுகிப் போய்விடாது.
‘இவற்றால் பெரிதாக எதுவும் குடி முழுகிப் போய்விடாது’ என்ற வாக்கியத்தை நீங்கள் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்வது உங்களை ஆசுவாசப்படுத்தக்கூடும்.
அல்லது, மார்கஸ் ஆரீலியஸின் இக்கேள்வியை முயன்று பாருங்கள்:
உங்களுக்கு நிகழ்ந்துள்ள விஷயம், நீதி, பெருந்தன்மை, சுயகட்டுப்பாடு, நல்லறிவு, விவேகம், நேர்மை, பணிவு, ஒளிவுமறைவின்மை ஆகிய பண்புநலன்களோடு
நீங்கள் செயல்படுவதைத் தடுக்கிறதா?
இல்லை.
அப்படியென்றால், விட்ட இடத்திலிருந்து உங்களுடைய வேலையைத் தொடருங்கள்.
ஆழ் மனரீதியாக நாம் தொடர்ந்து இக்கேள்வியை நம்மிடம் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்: இது குறித்து நாம் இவ்வளவு கலவரமடைய வேண்டுமா?
அதற்கான பதில் இப்படி இருக்க வேண்டும்:
“கலவரமடைய வேண்டியதில்லை; ஏனெனில், இதைக் கையாள்வதற்கு நான் ஏற்கனவே போதுமான அளவு என்னைத் தயார்படுத்திக் கொண்டுள்ளேன்; அதனால் என்னை என்னால் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும்.”
அல்லது, பதில் இப்படி இருக்கலாம்:
“கலவரமடைய வேண்டியதில்லை; ஏனெனில், சரியான நேரத்தில் என்னை நான் கட்டுப்படுத்திக் கொண்டேன்; பயனுள்ள எதையும் அது பங்களிக்கவில்லை என்பதை என்னால் உணர முடிகிறது.”


