அன்புமணி, சீமான், ஓபிஎஸ் ஆகியோருடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்வது தவெக தலைவர் விஜயின் திட்டமாக இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடைபெறும் தவெகவின் இரண்டாது மாநாடு குறித்தும், விஜயின் கூட்டணி கணக்குகள் குறித்தும் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- தவெக-வின் 2வது மாநில மாநாடு வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி மதுரையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அன்றைய தினம் விஜயகாந்தின் பிறந்தநாளாகும். சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற தவெக ஆர்ப்பாட்டத்தில் விஜய் கலந்து கொண்டு இரண்டே முக்கால் நிமிடங்கள் மட்டுமே பேசினார். விஜயை எழுச்சியின் வடிவமாக மக்கள் பார்க்கிறார்கள். அவருக்கு மக்களிடம் பெரிய அளவில் ஈர்ப்பு உள்ளது.
விஜயின் அரசியல் வியூக வகுப்பாளராக உள்ள ஜான் ஆரோக்கியசாமி ஏற்கனவே மாயாவதி, சித்தராமையா, அன்புமணி, கமல் போன்றவர்களுக்கு வேலை பார்த்துள்ளார். இவை அனைத்து தோல்வி அடைந்துள்ளன. அன்புமணி, ஓபிஎஸ், சீமான் ஆகியோரை தவெக உடன் கூட்டணியில் சேர்ப்பது விருப்பமாக உள்ளது. ஜான்ஆரோக்கியத்தின் விருப்பம், நாம் தமிழரை கூட்டணியில் சேர்ப்பதாகும். பாஜக சொல்வதை செய்துவிடுகிறேன் என்கிற அன்டர்ஸ்டாண்டிங் விஜய்க்கு உள்ளது. திமுக வாங்கக்கூடிய புதிய வாக்குகள், இளைய தலைமுறையினரின் வாக்குகளில் விஜய் ஓட்டை போட்டுவிடுகிறார். அதேபோல் சிறுபான்மையினரின் வாக்குகளிலும் ஓட்டைபோடுகிறார்.
கடந்த மாநாட்டிற்கும் இந்த மாநாட்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன என்றால் மாநிலம் முழுக்க கட்சியின் கட்டமைப்பை ஏற்படுத்த முயற்சித்திருக்கிறார்கள். மாவட்ட செயலாளர்களை முழுமையாக நியமித்துவிட்டார்கள். பூத் கமிட்டி கூட்டத்திற்காக மாநாடு நடத்தினார்கள். அதற்கு கீழே அவர்களால் செல்லவில்லை. ஐ.ஆர்.எஸ். அதிகாரி அருண்ராஜ் தான் இந்த மாநாட்டில் கலந்துகொள்கிறார். ஜான் ஆரோக்கியம்தான் வியூக அமைப்பாளராக உள்ளார். அவர் சொல்கிற விஷயங்களை இணையதளங்களில் எடுத்துச்செல்லும் நபராக தான் ஆதவ் அர்ஜுனா இருக்கிறார். தவெகாவின் இலக்கு என்பது நிறைய வாக்குகள் பெற வேண்டும். நிறைய எம்எல்ஏ-க்கள் வெற்றி பெற வேண்டும். அதன் மூலம் திமுக, அதிமுக கட்சிகளுக்கு அழுத்தம் தர வேண்டும் என்பதுதான் அவர்களின் திட்டம். ஆட்சியில் பங்கு என்பதை எதிர்வரும் மாநாட்டிலும் வலியுறுத்துவார்கள். விஜயுடன் கூட்டணிக்கு வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளவர்கள் சீமான், ஓபிஎ, அன்புமணி ஆவர்.
ஓபிஎஸ்க்கு வேறு வழியில்லை. ஒன்று அவர் எடப்பாடி பழனிசாமியிடம் சென்று தஞ்சம் அடைய வேண்டும். ஆனால் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அதற்கு வாய்ப்பு இல்லை என்று சொல்லிவிட்டார். எனவே ஓபிஎஸ் தனிக்கட்சி தொடங்கினாலும், அவர் விஜயிடம் கூட்டணி செல்வதை தவிர வேறு வாய்ப்பு கிடையாது. அன்புமணி ராமதாஸ் – ராமதாஸ் தகராறு முடியப் போகிறது. இருவரும் பிரச்சினையை முடித்துக்கொண்டார்கள் என்றால் அன்புமணி கேட்டுக்கொண்டபடி போலீசில் அளித்த புகாரை ராமதாஸ் திரும்ப பெற்றுவிடுவார். ராமதாஸ் பாஜக கூட்டணிக்கு செல்ல விரும்பவில்லை. அன்புமணி ஆட்சியில் பங்கு என்று கேட்கிற போது, அவரும், ராமதாசும் இணைந்தே விஜய் கூட்டணிக்கு செல்ல வாய்ப்புப உள்ளது. அதை பாஜக எப்படி அனுமதிக்கும் என்பதுதான் அடுத்தக்கட்ட நகர்வாக இருக்கும்.
அன்புமணி ஆட்சியில் பங்கு கேட்கிறபோது எடப்பாடி பழனிசாமி அதை மறுக்கிறார். அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும். கூட்டணி ஆட்சிக்கு சம்மதிக்க மாட்டோம் என்று சொல்கிறார். அப்போது, அவரிடம் ஆட்சியில் பங்கு கேட்கும் அன்புமணி எப்படி செல்ல முடியும். கூட்டணி ஆட்சி என்று தொடர்ச்சியாக சொல்லி வந்த அமித்ஷா கூட, கடந்த சில நாட்களாக அமைதியாக இருக்கிறார். எடப்பாடியின் சுற்றுப்பயணத்தின் தாக்கம் அமித்ஷாவை அமைதியாக்கி உள்ளது.
தமிழ்நாட்டில் அதிமுக, திமுக அல்லாத வாக்குகள் என்று 15 சதவீதம் வாக்குகள் உள்ளன. அதில் பெரும் பங்கை விஜய் எடுக்கிறார். முன்னதாக இந்த வாக்கு வங்கியில் 8 சதவீதம் வரை சீமான் எடுத்துக்கொண்டிருந்தார். தற்போது சீமானின் வாக்குகள் எல்லாம் இடம்பெயர்ந்து விஜயிடம் வந்துவிடும். அப்போது 15 சதவீதத்திற்குள்ளாக தான் விஜய்க்கு வாக்குகள் வரும். அத்துடன் இளைஞர்கள், சிறுபான்மையினர் வாக்குகள் திமுகவுக்கு போக வேண்டியது. இதையும் விஜய் குறிவைக்கிறார். அப்போது அந்த வியூகத்திற்குள் செல்வாரா? அல்லது ஜான் ஆரோக்கியசாமி சொல்வது போல சீமான், அன்புமணி, ஓபிஎஸ் என்கிற கூட்டணி கணக்கிற்குள் செல்வாரா? என்று தெரியவில்லை.
அதிமுக என்பது நடிகர்கள் தலைமை தாங்கிய கட்சி. எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் போன்றவர்களுக்கு நடிகர்களின் வீச்சு என்பது எத்தகையது என்று அவர்களுக்கு தெரியும். திமுகவை விஜய் மிக கடுமையாக விமர்சிப்பதால் அதிமுகவினர் அந்த வேலையை விஜயிடம் கொடுத்துவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். தற்போது தான் அதிமுக களத்தில் இறங்கி திமுகவை எதிர்கொள்வதற்கான வேலைகளில் ஈடுபட்டிருக்கின்றனர். அதற்கு போட்டியாக ஸ்டாலினும் ஓரணியில் தமிழ்நாடு என செய்து கொண்டிருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக என்ன தாக்கத்தை ஏற்படுத்த போகிறது என்பதை பொறுத்துதன் தேர்தல் முடிவுகள் வரும்.
தவெக முடிந்த அளவுக்கு சிறப்பாக செயல்படுவது, எதிர்க்கட்சி தலைவராக வருவது என்று தான் வியூகம் வகுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன். அதிமுக, திமுக என்கிற 2 ஜாம்பவான்களை எதிர்த்து நிற்க வேண்டும். கூட்டணி கட்சிகளை உருவாக்க வேண்டும் என்பதற்காக திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார்கள். விஜயகாந்த் பிறந்த மதுரை மண்ணில், அவர் பிறந்த நாளன்று மாநாடு நடத்துவதன் மூலம் தன்னை புரமோட் செய்ய முடியும் என்று விஜய் நினைக்கிறார். ஆனால் தென் மாவட்டங்களில் கட்சியை மக்களிடம் கொண்டுசெல்வதற்கு நிறைய சாதிய கணக்கீடுகள் இருக்கின்றன. அதில் இன்னும் தவெக வரவே இல்லை. மொழி சிறுபான்மையினரான விஜயகாந்த் இந்த தடைகளை எல்லாம் முறியடித்தார். அதுபோன்று விஜய் முறியடிப்பாரா? என்ன தான் விஜயாந்தின் பிறந்தநாளில் மாநாடு நடத்தினாலும் அவர் விஜயகாந்தாக மாறுவாரா என்பது கேள்விதான், இவ்வாறு அவர் தெரிவித்தார்.